சென்னை: மும்பை அணிக்கு ஹர்திக் பாண்டியா திரும்பியதால், நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சோகத்தில் இருப்பதாக முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நெருங்கியுள்ள நிலையில், ஒவ்வொரு அணிகளும் டிரேடிங் முறையில் வீரர்களை ஒப்பந்தம் செய்ய தீவிரமாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா, திடீரென மீண்டும் மும்பை அணிக்கு திரும்பியுள்ளார். இவரை அணிக்குள் கொண்டு வருவதற்காக மும்பை அணி நிர்வாகம் கேமரூன் க்ரீனை ஆர்சிபி அணிக்கு தாரை வார்த்துள்ளது.

இதன் காரணமாக ரோகித் சர்மாவுக்கு பின் ஹர்திக் பாண்டியாவே அடுத்த கேப்டனாக நியமனம் செய்யபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை அணி ரசிகர்களும் ஹர்திக் பாண்டியாவின் வருகையை கொண்டாடி வருகின்றனர். ஆனால் மும்பை அணியின் அடுத்த கேப்டன் என்று பார்க்கப்பட்ட ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியாவின் கம்பேக் காரணமாக விரக்தியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏனென்றால் மும்பை அணியின் அடுத்த கேப்டனுக்கான ரேஸில் பும்ரா இருந்தார். ஆனால் திடீரென ஹர்திக் பாண்டியா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இதன் காரணமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பும்ரா, சில நேரங்களில் அமைதியே சிறந்த பதில் என்று பதிவிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் மும்பை அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பும்ரா பின் தொடர்வதையும் நிறுத்தினார்.
இதனால் மும்பை அணியில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகக்கூடும் என்று ரசிகர்களிடையே கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜஸ்பிரித் பும்ராவின் செயல்பாடுகள் குறித்து தனது யூ-ட்யூப் சேனலில் ஸ்ரீகாந்த் பேசுகையில், சர்வதேச அளவில் ஜஸ்பிரித் பும்ரா மிகவும் வித்தியாசமான வீரர். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பவுலராக உள்ளார். உலகக்கோப்பை தொடரின் பும்ராவின் செயல்பாடுகள் எப்படி இருந்தது என்று அனைவருக்கும் தெரியும்.
அதேபோல் 2022ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக பும்ரா செயல்பட்டுள்ளார். அதனால் அடுத்த கேப்டன் என்ற பேச்சு வரும் போது, ஹர்திக் பாண்டியாவின் கம்பேக்கை பும்ரா ரசிக்க மாட்டார். ஏனென்றால் பும்ரா தொடக்கம் முதலே மும்பை அணியுடன் இருக்கிறார். ஆனால் ஹர்திக் பாண்டியா 2 ஆண்டுகள் விலகி வேறு அணிக்காக விளையாடிவிட்டு, தற்போது மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். அதனால் அவரை கொண்டாடுவது ஏற்புடையதாக இருக்காது என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.