மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, சில ஆண்டுகளுக்கு முன்பு தோனிக்கு எந்த நிலை ஏற்பட்டதோ அதேபோல் ஒரு சிக்கலில் சிக்கிருக்கிறார். விளையாட்டு உலகத்தில் மட்டுமல்ல வாழ்க்கையில் எந்த நிலைக்கு சென்றாலும் சரிவு என்பது நிச்சயம் நடக்கும்.
அந்த சரிவில் சிக்கிக் கொள்ளாமல் அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறோம் என்பதில்தான் சாம்பியன் வீரர்களின் வாழ்க்கையே இருக்கிறது. தற்போது ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

ரோகித் சர்மாவிடம் சொல்லாமலேயே மும்பை இந்தியன்ஸ் அணி இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது. மேலும் இதற்குப் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் பேட்ஸ்மேனாக ரோகித் சரியாக விளையாடாததால் தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம் என்று காரணம் கூறி இருக்கிறார். இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டும் தோனி இதே போல் ஒரு கஷ்ட காலத்தை சந்தித்தார்.
ஆனால் அதிலிருந்து அவர் மீண்டு தான் சாம்பியன் வீரர் என்பதை நிரூபித்தார். அதேபோல் ரோகித் சர்மாவும் செய்வாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்ட காலகட்டத்தில் புனே அணியின் கேப்டனாக தோனி இருந்தார். ஆனால் அந்த அணியின் உரிமையாளர்களின் ஒருவரான கோயங்கா, தோனி குறித்து கடுமையான விமர்சனத்தை வைத்து வந்தார்.
தோனி ஒரு நல்ல கேப்டன் கிடையாது என்று அவரை மட்டம் தட்டி வந்தார். மேலும் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே ஸ்மித்தை கேப்டனாக அந்த அணி நிர்வாகம் மாற்றியது. அதன் பிறகு ஸ்மித் ஒரு போட்டியில் நன்றாக விளையாடியதை தொடர்ந்து நாங்கள் எடுத்த முடிவு எவ்வளவு சிறப்பானது என்று பார்த்தீர்களா என்று கூறியிருந்தார்.
இந்தக் கஷ்ட காலத்தில் தோனி எதுவும் செய்யவில்லை. பொறுமை காத்துக் கொண்டிருந்தார்.என் காலம் மீண்டும் வரும் அப்போது நான் யார் என்று காட்டுகிறேன் என்று மனதிலே வைத்துக் கொண்டிருந்த தோனி மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடருக்கு திரும்பியவுடன் கேப்டனாக மாறினார்.2018 ஆம் ஆண்டிலிருந்து 2023 ஆம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்று, ஒருமுறை இறுதிப் போட்டி வரை சென்று சாதனை படைத்தது.
கேப்டனாக சரியில்லை என்று சொன்னவர் முகத்தில் எல்லாம் தோனி கரியை பூசினார். தற்போது ரோகித் சர்மாவும் அதே போல் ஒரு நிலையில் தான் இருக்கிறார். இதனால் தோனியை போலவே ரோகித் சர்மா வேறு அணிக்கு சென்று சாம்பியன் பட்டத்தை மீண்டும் கைப்பற்றி மும்பை அணி முகத்தில் கரியை பூச வேண்டும் என்று ரசிகர்கள் அறிவுரை கூறிய வருகிறார்கள்.