துபாயில் ஐபிஎல் ஏலம் 2024.. எத்தனை மணிக்கு தொடக்கம்? எந்த டிவி மற்றும் ஓடிடியில் பார்க்கலாம்?
துபாய்: ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நாளை நடக்கவுள்ள நிலையில், எந்த தொலைக்காட்சி மற்றும் ஒடிடியில் நேரலையில் பார்க்கலாம் என்பதை அறியலாம்.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நாளை துபாயில் உள்ள கோகோ கோலா வளாகத்தில் நடக்கவுள்ளது. முதல்முறையாக ஐபிஎல் ஏலம் இந்தியாவில் இல்லாமல் வெளிநாட்டில் நடக்கவுள்ளது. ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்பதற்காக மொத்தமாக உலகம் முழுவதும் இருந்து 1,166 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். அதில் இருந்து ஐபிஎல் அணிகள் தரப்பில் மொத்தமாக 333 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த 333 வீரர்களில் 214 இந்திய வீரர்களும், 119 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர். அதில் 10 அணிகளுக்கும் சேர்த்து 77 வீரர்கள் மட்டுமே தேவையாக உள்ளனர். அதில் 30 வெளிநாட்டு வீரர்களின் இடங்கள் நிரப்பப்பட வேண்டிய நிலை உள்ளது. இதில் அதிகபட்சமாக குஜராத் அணியின் கையிருப்பில் ரூ.38.15 கோடி உள்ளது. அதேபோல் சிஎஸ்கே அணியிடம் ரூ.31.4 கோடி கையிருப்பில் உள்ளது.
அதேபோல் குறைந்தபட்சமாக லக்னோ அணி கையிருப்பில் ரூ.13.15 கோடி உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் ஏலம் வரலாற்றில் முதல்முறையாக ஏலத்தை பெண் ஒருவர் நடத்தவுள்ளார். மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலத்தை நடத்திய மல்லிகா சாகர் நடத்தவுள்ளார். நாளை இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு வீரர்களுக்கான மினி ஏலம் தொடங்கவுள்ளது.
இந்த மினி ஏலத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பார்க்க முடியும். ஸ்டார் ஸ்போர்ட் தொலைக்காட்சி பிற மொழிகளிலும் ஐபிஎல் ஏலம் நேரலை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஓடிடி-யை பொறுத்தவரை ஜியோ சினிமாஸ் நேரலை செய்ய உள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஐபிஎல் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடமும், ஓடிடி உரிமை ஜியோ சினிமாஸ் நிறுவனத்திடமும் உள்ளது. அதற்கேற்ப இரு தரப்பும் தொலைக்காட்சி மற்றும் ஓடிடியில் ஒளிபரப்பவுள்ளனர். நாளை ஐபிஎல் ஏலம் நடக்கவுள்ள நிலையில், ரசிகர்களிடையே எந்த அணி நிர்வாகம் எந்த வீரரை வாங்கும் என்ற விவாதம் நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications