IPL: "ஜெயவர்தனேவை பலிகடா ஆக்கிட்டாங்க".. மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தை விளாசிய பத்ரிநாத்!
சென்னை: ஐபிஎல் தொடரின் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து இலங்கை ஜாம்பவான் மகிளா ஜெயவர்தனே விலகிய விவகாரம், குறித்து சுப்பிரமணியம் பத்ரிநாத் கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர் தோல்விகளுக்கு நிர்வாகக் குளறுபடிகளே காரணம் என்ற நிலையில், ஜெயவர்தனேவை திட்டமிட்டு நிர்வாகம் பலிகடா ஆக்கிவிட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் மிகக் காட்டமாக விளாசியுள்ளார்.
தனது யூடியூப் பக்கத்தில் பேசிய பத்ரிநாத், "ஜெயவர்தனே மும்பை அணிக்கு 3 சாம்பியன் பட்டங்களை வென்று தந்த மிக வெற்றிகரமான பயிற்சியாளர். சமீபத்திய சறுக்கல்களுக்கு அவரை மட்டுமே பொறுப்பாக்குவது எந்த விதத்தில் நியாயம்? அவர் இதற்கு மேல் என்ன செய்திருக்க முடியும்? உலகின் தலைசிறந்த வீரர்கள் அந்த அணியில் இருந்தனர். ஹர்திக் பாண்டியாவுக்கு எப்படி பந்துவீச வேண்டும் என்றோ, ரோஹித் சர்மாவுக்கு எப்படி புல் ஷாட் ஆட வேண்டும் என்றோ, ஜஸ்பிரித் பும்ராவுக்கு யார்க்கர் வீசவோ ஜெயவர்தனேவா சொல்லிக் கொடுக்க முடியும்? அவர்கள் அனைவரும் ஏற்கெனவே தங்களை நிரூபித்த சர்வதேச வீரர்கள்" என்று ஆவேசப்பட்டார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும் இதனுடன் ஒப்பிட்ட அவர், "எந்தவொரு அணியும் தோல்விகளைச் சந்திக்கும் போது பயிற்சியாளரையே முதலில் பலிகடா ஆக்குகின்றன. இதே தவறைத்தான் சிஎஸ்கே நிர்வாகமும் ஸ்டீபன் பிளெமிங் விஷயத்தில் செய்தது. ஜெயவர்தனே மற்றும் பிளெமிங் ஆகிய இருவருமே அநியாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த சில சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே ஆகிய இரு அணிகளிலுமே முறையான தலைமை இல்லை. கடந்த 6 சீசன்களில் வெறும் 2 முறை மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணி பிளேஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது" என்று சுட்டிக்காட்டினார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் தீர்வு கூறிய பத்ரிநாத், "ரோஹித் சர்மாவை மீண்டும் கேப்டனாக அறிவிக்க வேண்டும். தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட்டை விடச் சிறந்த தேர்வு இருக்க முடியாது. இவர்கள் இருவரும் இணைந்து இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பையை வென்று தந்துள்ளனர். அதே மேஜிக்கை மும்பை அணியிலும் அவர்களால் நிகழ்த்த முடியும். அணியை மீண்டும் தலைநிமிர வைக்க இந்த மாற்றம் மிக அவசியமாகும்" என்று யோசனை தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications

