ஜனவரி மாதத்தில் இனி ஐபிஎல் தொடர்.. ஒரு சீசனுக்கு 94 போட்டி.. லலித் மோடி சொன்ன விசயம்
மும்பை: ஐபிஎல் தொடரை ஜனவரி மாதத்திலேயே தொடங்கி, மொத்தம் 94 போட்டிகள் கொண்ட தொடராக விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று ஐபிஎல் தொடரின் முன்னாள் தலைவர் லலித் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு ஐசிசி தலைவரான ஜெய் ஷா உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சமூக வலைதள பதிவொன்றில் ஜெய் ஷா, ஐபிஎல் மற்றும் ஐசிசியைக் குறிப்பிட்டுள்ள லலித் மோடி, 10 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் முழுமையான Home and Away முறையை பின்பற்ற வேண்டும் என கேட்டுகொண்டுள்ளார். இதன் மூலம் 90 லீக் போட்டிகள் மற்றும் 4 பிளே-ஆஃப் போட்டிகள் என மொத்தம் 94 போட்டிகள் நடத்தப்படும். இதனால் ஒவ்வொரு அணியும் மற்ற அனைத்து அணிகளுடனும் தலா இரண்டு முறை மோதும் வாய்ப்பு கிடைக்கும்.

ஐபிஎல் தொடரை ஜனவரியிலேயே தொடங்குவது இந்தியாவில் குளிர்கால நிலவரத்தைச் சிறப்பாக பயன்படுத்த உதவும் என்று மோடி குறிப்பிட்டுள்ளார். போட்டிகளை கூடுதல் வாரங்களுக்குப் பிரித்து நடத்துவதன் மூலம் ஆட்டக்காரர்களுக்கு போதிய ஓய்வு, சீரான அட்டவணை மற்றும் சிறந்த பயிற்சி நேரங்கள் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமே அதன் மதிப்பை உயர்த்தாது என்றும், தரம், பார்வையாளர்கள், வீரர்களின் பங்கேற்பு மற்றும் நியாயமான செலவினங்கள் ஆகியவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஜெய் ஷாவின் பங்களிப்பைக் குறிப்பிட்டுப் பேசிய மோடி, "பிசிசிஐ செயலாளராக அவர் இருந்த காலத்தில், 2023-27 காலகட்டத்திற்கான ஐபிஎல் ஊடக உரிமங்கள் ரூ.48,390 கோடிக்கும் அதிகமாக ஏலம் போயின. விளையாட்டுத்துறையின் கனவுகளை எவ்வாறு மதிப்புமிக்க சொத்தாக மாற்றுவது என்பதை அவர் அறிவார். தற்போது ஐபிஎல் தொடரின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு அவர் உதவ முடியும்" என்று கூறியுள்ளார்.
வரவிருக்கும் காலத்தில் இருதரப்பு தொடர்கள் மற்றும் ஐசிசி தொடர்களின் வருவாய் குறைய வாய்ப்புள்ளதால், பிசிசிஐ தனது முக்கிய வணிக ஆதாரமான ஐபிஎல் தொடரை இப்போதே தயார்ப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ஜனவரி மாதத்தில் ஏற்கனவே பிற நாடுகளின் லீக் தொடர்கள் நடைபெற்று வருவதை ஒப்புக்கொண்ட மோடி, சர்வதேச சுற்றுப்பயணங்கள், ஐசிசி தொடர்கள், மகளிர் பிரீமியர் லீக் மற்றும் உள்நாட்டுப் போட்டிகள் பாதிக்கப்படாத வகையில் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்றார்.
தற்போது நடைபெற்று வரும் வருங்கால சுற்றுப்பயணத் திட்ட விவாதங்களில் இந்த ஜனவரி மாத கோரிக்கையை சேர்க்க வேண்டும் என்றும், 2027-க்குப் பிந்தைய ஐபிஎல் உரிமத்திற்கு இதற்கான திட்டமிடல் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் மோடி பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகக் குழுவுக்கு யோசனை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications


