
மும்பை இந்தியன்ஸ்
இந்த சீசனில் பேட்டிங் மற்றும் பவுலிங் என எதுவுமே மும்பை அணிக்கு முழுவதுமாக செட் ஆகவில்லை. குறிப்பாக இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், பாண்டிய பிரதர்ஸ் எனப் பல அதிரடி வீரர்களைக் கொண்டிருந்தாலும் பேட்டிங்கில் மும்பை அணி தொடர்ந்து சொதப்பி வருகிறது. அதிலும் ஐக்கிய அமீரகத்தில் போட்டிகள் தொடங்கிய பிறகு வரிசையாகத் தோல்விகளைச் சந்தித்து வந்தது. இதனால் ஒரு கட்டத்தில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுமா என்றே சந்தேகம் ஏற்பட்டது. அதன் பின்னர் 2 போட்டிகளில் வென்று மும்பை அணி பிளே ஆப் கனவைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

பேட்டிங் வரிசை
இந்த ஆண்டு மும்பையில் எதிர்பார்க்கப்பட்ட அனைத்தது பேட்ஸ்மேன்களும் தொடர்ந்து சொதப்பினர். குறிப்பாக, அணியின் இளம் வீரர் இஷான் கிஷன். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முதல் எட்டு போட்டிகளில், இஷான் கிஷன் வெறும் 107 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். அவரது சாரசரி 13.37 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 87 ஆகும். மோசமான ஃபார்மில் இருந்ததால் பிளேயிங் 11இல் இருந்தும் கூட அவர் நீக்கப்பட்டார். அவரது இந்த மோசமான ஃபார்ம் மும்பை அணிக்கு மட்டும் பேரிழப்பு இல்லை. ஏனென்றால் இந்த மாதம் தொடங்கும் டி 20 உலகக் கோப்பையிலும் இந்திய அணியில் அவர் இடம் பெற்றுள்ளார். தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பினால், அவர் தன்னம்பிக்கை இழக்கக் கூடும். இது உலகக் கோப்பையிலும் தொடர்ந்தால் இந்திய அணிக்கே அது மிகப் பெரிய இழப்பாக அமையும்.

இஷான் கிஷன்
தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மும்பை இந்தியன்ஸ் இளம் வீரர் இஷான் கிஷன் நேற்றைய போட்டியில் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். ஷார்ஜா ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் வெறும் 25 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் அவர் 50 ரன்கள் எடுத்தார். இஷான் கிஷனில் அதிரடி ஆட்டம் மும்பை அணியை வெறும் 8.2 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற வைக்க உதவியது. இதனால் மும்பை அணியன் நெட் ரன் ரேடும் முன்னேறப் புள்ளிப் பட்டியலில் மும்பை அணி ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஓப்பனிங் பேட்ஸ்மேன்
இந்த போட்டி இஷான் கிஷனுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும் போட்டியாக மாறியுள்ளது. பிட்ச் பேட்டிங்கிற்கு ஏற்றதாக இல்லை என்பதால் முடிந்தவரை அனைத்து பந்துகளையும் நேராக அடிக்க முயன்றதாக அவர் தெரிவித்தார். மேலும், இழந்த தன்னம்பிக்கையை மீண்டும் பெறுவதில் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா மற்றும் கீரோன் பொல்லார்ட் ஆகியோருடன் நடந்த உரையாடல்கள் பெரிதும் உதவியதாகவும் அவர் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், "மீண்டும் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி ரன்களை எடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது மிகவும் இனிமையான உணர்வு.

விராட் கோலி
நாங்கள் முதலில் பவுலிங் செய்ததால் பிட்ச் குறித்து நல்லதொரு புரிதல் கிடைத்தது. பந்து பேட்ஸ்மேனுக்கு நன்றாக வருவதில்லை என்பதைப் புரிந்து கொண்டோம். எனவே அதற்கு ஏற்றபடி வியூகங்களை மாற்றியமைத்தோம். ஒரு விளையாட்டு வீரருக்கு வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருவது சகஜமான ஒன்று தான். நான் எனது பேட்டிங் குறித்து விராட் கோலி, ஹர்திக், பொல்லார்ட் ஆகியோரிடம் ஆலோசனை பெற்றேன். அது எனக்குப் பெரிய நம்பிக்கையை அளித்தது. இப்போது இருக்கும் சூழலில் நாங்கள் செய்ய வேண்டியது ஒன்று தான். இதே எனர்ஜியுடன் அடுத்த போட்டிக்குத் தயாராக வேண்டும். இதே உத்வேகத்துடன் ஆட வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

வைரல் வீடியோ
முன்னதாக கடந்த செப். 26ஆம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. அதில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய மும்பை அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் இஷான் கிஷன் 12 பந்துகளில் 9 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். இந்த போட்டிக்கு பின்னரே, இஷான் கிஷனை அழைத்து விராட் கோலி பேசினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஐபிஎல் தொடர்
நேற்றை ஆட்டத்தில் மும்பை வீரர் குயின்டன் டி காக் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் மும்பை அணிக்காக 297 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால் அவரது ஸ்டரைக் ரேட் வெறும் 116.01 மட்டுமே. தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை அணி 13 ஆட்டங்களில் விளையாடி 12 புள்ளிகள் எடுத்துள்ளனர். கே.கே.ஆர் அணியன் நெட் ரன் ரேட் அதிகமாக உள்ளதால், அந்த அணி தற்போது 4ஆம் இடத்திலும் மும்பை 5ஆம் இடத்திலும் உள்ளது. மும்பை அணி தனது கடைசி லீக் ஆட்டம் வரும் வெள்ளிக்கிழமை சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது.


Click it and Unblock the Notifications