அகமதாபாத்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா 8 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து பரிதாபமாக வெளியேறியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 35வது லீக் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து மும்பை அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். பின்னர் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. சுப்மன் கில், டேவிட் மில்லர், அபினவ் மனோகர் ஆகியோர் அதிரடியாக ஆடினர்.

கடைசி 6 ஓவர்களில் மட்டும் குஜராத் அணி பேட்ஸ்மேன்கள் 94 ரன்களை குவித்துள்ளனர். இதன் காரணமாக குஜராத் அணி ஐபிஎல் வரலாற்றில் 2வது முறையாக 200 ரன்களுக்கு மேல் குவித்தது. மிகப்பெரிய இலக்கு என்பதால், மும்பை அணி ரசிகர்கள் மைதானத்திலேயே உற்சாகமின்றி இருந்தனர். ஏனென்றால் மும்பை அணி ஒரேயொரு முறை மட்டுமே 200 ரன்களுக்கு மேல் சேஸ் செய்துள்ளது.
இதனால் மும்பை அணி வரலாற்றை மாற்றுமா என்ற கேள்வியுடன் களமிறங்கியது. மும்பை அணி தரப்பில் கேப்டன் ரோகித் சர்மா - இஷான் கிஷன் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. முதல் ஓவரை முகமது ஷமி வீச, ஒய்டு உட்பட 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் இரண்டாவது ஓவரை குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா வீசினார்.
அந்த ஓவரின் கடைசி பந்தில் ஹர்திக் பாண்டியா வீசிய அதிவேக பந்தை கணிக்காமல் ரோகித் சர்மா லெக் சைடில் அடிக்க பேட்டை திருப்பினார். ஆனால் பந்து வேகமாக வந்ததால், பேட்டில் எட்ஜ் ஆகியது. இதனால் ஹர்திக் பாண்டியா வீசிய பந்து, அவரிடமே கேட்சானது. இதனால் 8 பந்துகளில் வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். பந்து எட்ஜாகிய போதே கேட்சை பார்க்காமல் ரோகித் சர்மா தலையை குனிந்தவாறு பரிதாபமாக வெளியேறினார்.