
ஐபிஎல் தொடர்
ஐக்கிய அமீரகத்தில் இப்போது ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் இறுதிப் போட்டி வரும் அக்டோபர் 15ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. அதன் பிறகு சில நாட்கள் இடைவெளியிலேயே வரும் அக்டோபர் 17ஆம் தேதி ஓமன் மற்றும் ஐக்கிய அமீரகத்தில் உலகக் கோப்பை டி20 தொடர் தொடங்குகிறது. இதில் இந்திய அணி வரும் அக்டோபர் 24ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக இந்திய பலம் வாய்ந்த ஒரு அணியை அறிவித்துள்ளது.

டி20 உலகக் கோப்பை
ஓமன் மற்றும் ஐக்கிய அமீரகத்தில் சுழற்பந்து வீச்சாளர்களின் தாக்கம் முக்கியமானதாக இருக்கும் என்பதால் அதிக எண்ணிக்கையில் சுழற்பந்து வீச்சாளர்கள் இந்த தொடருக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அஷ்வின், ராகுல் சாஹர், வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு இந்த உலகக் கோப்பை தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மூவருமே தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வருவதால், அந்நாட்டின் சூழலுக்கு ஏற்றபடி அவர்களால் அட்ஜஸ்ட் ஆகிக் கொள்ள முடியும். அதேநேரம் மூன்று மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளதால் பிளேயிங் 11இல் யாருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது சற்று சிக்கலான விஷயம் தான். இதில் அணியின் கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, அணியின் ஆலோசகர் தோனி ஆகியோர் எடுக்கும் முடிவு முக்கியமானதாக இருக்கும்.

ஜடேஜா தான் பெஸ்ட்
இருப்பினும், இவர்களை 3 பேரைக் காட்டிலும், ஜடேஜாவின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நெஹ்ரா தெரிவித்துள்ளார். தற்போது ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் ஜடேஜா மேட்ச் வின்னராக மாறி வருகிறார். ஐக்கிய அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பவுலிங்கை காட்டிலும் பேட்டிங்கில் ஜடேஜாவின் பங்கு முக்கியமானதாக மாறி வருகிறது. 10 போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா 179 ரன்கள் எடுத்துள்ளார். இந்தியாவில் நடைபெற்ற போட்டிகளின் சமயத்தில் பெங்களூரு அணிக்கு எதிராக ஹர்ஷல் படேலின் ஒரே ஓவரில் 37 ரன்களை பொளந்து கட்டியிருப்பார். அதேபோல கடந்த ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியிலும் 22 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தியிருப்பார். அந்த போட்டியில் ஜடேஜா அடித்த 22 ரன்கள் தான் வெற்றி தோல்வியைத் தீர்மானித்தது.

பேட்டிங்
ஜடேஜாவின் இந்த அட்டகாசமான ஆட்டத்தைப் பாராட்டியுள்ள நெஹ்ரா, அவரது ஆட்டம் தோனி, ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் கியரான் பொல்லார்ட் ஆகியோரின் ஆட்டங்களுக்கு இணையாக உள்ளதாகப் புகழ்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "பவுலிங்கில் அவர் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். கடந்த போட்டியில் கட்டுக்கோப்பாகப் பந்து வீசிய அவர், விக்கெட் ஒன்றையும் கைப்பற்றினார். அதேநேரம் பேட்டிங்கை பொறுத்தவரை அவர் கடந்த 2 ஆண்டுகளாகவே சீரான ஒரு ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார்.

சிறந்த பினிஷர்கள்
அந்த போட்டியில் பிரசித் கிருஷ்ணா ஓவரில் அட்டகாசமான சிக்சர்களை அவர் பறக்கவிட்டார். சிறந்த பினிஷர்கள் என்று நாம் தோனி, ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் கீரன் பொல்லார்ட் ஆகியோரை குறிப்பிடுகிறோம். ஆனால் தற்போது ரவீந்திர ஜடேஜா கூட அதையே தான் செய்கிறார் சிஎஸ்கே அணிக்கும் சரி சமீபத்தில் முடிந்த இங்கிலாந்து டெஸ்டி தொடரிலும் சரி அவரது பேட்டிங் சிறப்பாகவே இருந்தது. கடைசியாக இப்போது தான் அவரது பேட்டிங் சிறப்பாக மாறி வருகிறது" என்று கூறினார்.

பிளேயிங் 11
டி20 உலகக் கோப்பைக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் மொத்தம் 5 சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். எனவே, உலகக் கோப்பை தொடரில் ஐக்கிய அமீரகத்தின் பிட்ச் தற்போதுள்ள காட்டிலும் சுழற்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிளேயிங் 11இல் இடம் பெறுவதில் வருண் சக்கரவர்த்தி, ராகுல் சாஹர், அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு கடும் போட்டி நிலவும். ஆனால், ஜடேஜாவின் பேட்டிங் திறன் பிளேயிங் 11இல் அவரது இடத்தை உறுதி செய்யும் என்று நெஹ்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜடேஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்
பிளேயிங் 11 தேர்வு குறித்து அவர் கூறுகையில், "இந்தியா அணியில் மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராக முழு நேரப் பந்து வீச்சாளருக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா அல்லது ரவீந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்பதை நாம் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும். ஆனால் இப்போது வரை அங்கு நிலவும் சூழலை பார்க்கும்போது பிளேயிங் 11 தேர்வின்போது பயிற்சியாளர் சாஸ்திரி, கேப்டன் கோலி மற்றும் ஆலோசகர் தோனி ஆகியோரின் மனதில் வரும் முதல் பெயராக ஜடேஜாவே இருப்பார். இந்திய அணி ஜடேஜாவை எப்படிப் பயன்படுத்தப் போகிறார்கள் என்பது தான் தற்போதைய கேள்வி. இந்திய அணியில் ஐந்து சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு உதவியாக இருந்தால் ஜடேஜா தான் சிறந்த தேர்வாக இருப்பார். ஆனால் அதேநேரம் பிளாட் ஆன பிட்ச் ஆக இருந்தால் வருண் சக்கரவர்த்தி மற்றும் ராகுல் சஹார் சிறந்த தேர்வாக இருக்கலாம்" என்றார்.


Click it and Unblock the Notifications