விஜய் ஹசாரே கோப்பை: மும்பை அணிக்கு திரும்பும் ரோகித் சர்மா
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ரோஹித் சர்மா, விரைவில் தொடங்கவுள்ள விஜய் ஹசாரே கோப்பை தொடரில் மும்பை அணிக்காக விளையாட உள்ளார். இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் நிறைவடைந்த பிறகு, தான் விஜய் ஹசாரே தொடரில் பங்கேற்க இருப்பதை மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் அவர் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 14 அன்று தொடங்கவுள்ள விஜய் ஹசாரே கோப்பை தொடரில் ரோஹித் சர்மா களம் இறங்குவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 13 முதல் 19 வரை டெல்லி, பெங்களூரு மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் நடைபெறும் இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட உள்நாட்டு ஒருநாள் தொடருக்கு பிறகு அவர் மும்பை அணியில் இணைவார்.

டிசம்பர் 21 அன்று சௌராஷ்டிரா அணிக்கு எதிராக நடைபெறும் மும்பை அணியின் நான்காவது லீக் போட்டியில் ரோஹித் சர்மா பங்கேற்க வாய்ப்புள்ளது. "இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு மும்பை அணிக்காக விளையாட இருப்பதாகவும், தனது பெயர் பரிசீலனையில் இருக்க வேண்டும் என்றும் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். எத்தனை போட்டிகளில் அவர் விளையாடுவார் என்பதை பின்னர் அறிவிப்பார்" என்று மும்பை கிரிக்கெட் சங்கத்தின் முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விஜய் ஹசாரே தொடரின் லீக் சுற்றுகள் டிசம்பர் 14 முதல் 29 வரையிலும், நாக் அவுட் போட்டிகள் ஜனவரி 2 முதல் 8 வரையிலும் நடைபெறவுள்ளன. லீக் போட்டிகள் அகமதாபாத், பெங்களூரு, ராஞ்சி மற்றும் ராஜ்கோட் ஆகிய இடங்களிலும், நாக் அவுட் போட்டிகள் விசாகப்பட்டினத்திலும் நடைபெற உள்ளன.
இலங்கை தொடரைத் தொடர்ந்து டிசம்பர் 22 முதல் மூன்று டி20 போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், அந்த காலகட்டத்தில் ரோஹித் சர்மா உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட கிடைக்கப் பெறுவார். இதன் மூலம், லீக் சுற்றின் கடைசி 10 நாட்களில் மும்பை அணிக்காக அவர் விளையாட முடியும். இதன்பின்னர், இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி 3 அன்று தொடங்குகிறது. இத்தொடரின் இறுதிப் போட்டி ஜனவரி 9 அன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
கடந்த சீசனிலும் ரோஹித் சர்மா மும்பை அணிக்காக ஜெய்ப்பூரில் நடைபெற்ற இரண்டு விஜய் ஹசாரே கோப்பை போட்டிகளில் விளையாடினார். அது 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு இத்தொடரில் அவரது முதல் பங்கேற்பாக அமைந்தது.
தற்போது ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் ரோஹித் சர்மா உள்ளூர் கிரிக்கெட்டிற்கு திரும்புவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் மற்றொரு முன்னணி வீரரான விராட் கோலியும் இதே வழியைப் பின்பற்றி உள்ளூர் போட்டிகளில் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.


Click it and Unblock the Notifications


