100 சதம் அடித்த சச்சினால் உலகின் முதல் மைதானத்தில் செஞ்சுரி அடிக்கவே முடியவில்லை.. எது தெரியுமா?
மும்பை: சச்சின் டெண்டுல்கர் சர்வதேச அரங்கில் பல நூறு வரலாற்று சாதனைகளைப் படைத்துள்ளார். உலகெங்கும் உள்ள புகழ்பெற்ற மைதானங்களில் சதங்களை விளாசித் தள்ளிய மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினால், கிரிக்கெட்டின் முதல் மைதானமான லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மட்டும் தன் வாழ்நாளில் ஒரு சதம் கூட அடிக்க முடியவில்லை என்பது பலரும் அறியாத உண்மை.
லண்டனின் வரலாற்றுச் சிறப்புமிக்க லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடி சதம் விளாச வேண்டும் என்பது கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவரின் வாழ்நாள் கனவாக இருக்கும். ஆனால் சச்சின் டெண்டுல்கருக்கு லார்ட்ஸ் மைதானம் ஒரு துரதிர்ஷ்டவசமான மைதானமாகவே அமைந்தது. டெஸ்ட் அல்லது ஒருநாள் போட்டி என எதிலுமே அவரால் இந்த மைதானத்தின் ஹானர்ஸ் போர்டில் தனது பெயரைப் பொறிக்க முடியவில்லை.

சச்சின் டெண்டுல்கர் தனது 24 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் லார்ட்ஸ் மைதானத்தில் மொத்தம் 8 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வெறும் 195 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அதேபோல் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வெறும் 45 ரன்களை மட்டுமே சேர்த்தார். இதனால் லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடிக்க முடியாமல் போனது அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு சிறு ஏக்கமாகவே இருந்தது.
சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை விளாசிய ஒரே வீரர் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே. டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்களும், ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களும் குவித்து உலக சாதனை படைத்துள்ளார். அத்துடன் சர்வதேச அரங்கில் 34 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களைக் குவித்து அதிக ரன் குவித்த வீரராகவும் முடிசூடா மன்னனாகத் திகழ்கிறார்.
200 டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்களும், 463 ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்களும் குவித்த மாபெரும் வீரருக்கு, கிரிக்கெட்டின் மெக்கா என அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானம் ஒரு எட்டாக்கனியாகவே போனது வியப்பிற்குரிய விஷயமாக உள்ளது. 24 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடிய சச்சின் லார்ட்ஸ் மைதானத்தில் 8 சர்வதேச போட்டிகளில் மட்டுமே ஆடினார் என்பதும் இதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications


