"இது முத்துப்பாண்டி கோட்டை" 8 இன்னிங்ஸில் 533 ரன்கள்.. அகமதாபாத் மைதானத்தில் அசத்தும் சுப்மன் கில்!
அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில் நரேந்திர மோடி மைதானத்தில் மட்டும் 8 இன்னிங்ஸில் 533 ரன்களை விளாசியுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றின் குவாலிஃபையர் 2வது போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து மும்பை அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 233 ரன்களை குவித்துள்ளது. அதிகபட்சமாக குஜராத் அணியின் சுப்மன் கில் 60 பந்துகளில் 129 ரன்களை விளாசி சாதனை படைத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் நடப்பு ஐபிஎல் தொடரில் ஆரஞ்ச் கேப்பையும் கைப்பற்றியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் 16 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள சுப்மன் கில் 851 ரன்களை குவித்துள்ளார். சுப்மன் கில்லின் இன்னிங்ஸை பாராட்டி விராட் கோலி, டி வில்லியர்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் சுப்மன் கில் ஆடியுள்ள 851 ரன்களில் அகமதாபாத் மைதானத்தில் ஆடிய 8 போட்டிகளில் 533 ரன்களை விளாசியுள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த மைதானத்தில் மட்டும் 3 அரைசதங்கள், இரு சதங்களை கில் விளாசியுள்ளார். இதன் மூலம் அகமதாபாத் மைதானத்தை தனது கோட்டையாக சுப்மன் கில் மாற்றியுள்ளார். ஏற்கனவே டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அகமதாபாத் மைதானத்தில் சதம் விளாசி அசத்தியுள்ளார். தற்போது ஐபிஎல் தொடரிலும் அகமதாபாத் மைதானத்தில் பொளந்து கட்டுவதால், அந்த மைதானத்தில் சுப்மன் கில் அபாயகரமான வீரராக மாறியுள்ளார். இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications