ஐதராபாத்: மும்பை அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரம் திலக் வர்மா, ஐதராபாத் வந்த மும்பை அணியினருக்கு தனது வீட்டில் வைத்து பிரம்மாண்ட விருந்து கொடுத்து அசத்தியுள்ளார்.
இன்றையப் போட்டியில் வலிமை வாய்ந்த ஐதராபாத் அணியை எதிர்த்து மும்பை அணி விளையாட உள்ளது. இந்தப் போட்டி ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடக்க உள்ளது. இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஐதராபாத் அணி 4 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்விகளுடன் உள்ளது. அதேபோல் மும்பை அணியும் 4 போட்டிகளில் விளையாடி 2 தோல்வி, 2 வெற்றிகளுடன் களத்தில் உள்ளது.

முதல் இரு போட்டிகளில் மோசமாக செயல்பட்ட மும்பை அணி, அடுத்த இரு போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளது. குறிப்பாக அந்த அணியின் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் ஃபார்முக்கு திரும்பியுள்ளனர். இருப்பினும் மும்பை அணியின் பேட்டிங் இளம் வீரரான திலக் வர்மவை சுற்றியே அமைக்கப்பட்டுள்ளது. பவர் பிளே ஓவர்களில் விக்கெட்டுகள் விழுந்தால் நிதானமாகவும், தேவைக்கேற்ப அதிரடியாகவும் ஆடி இன்னிங்ஸை கட்டமைக்கிறார்.
இதனால் மும்பை அணியின் எதிர்காலத்துக்கான வீரராக திலக் வர்மா பார்க்கப்படுகிறார். இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக சொந்த மண்ணில் நடக்கும் போட்டியில் திலக் வர்மா களமிறங்க உள்ளார். இந்தப் போட்டியை நேரில் பார்ப்பதற்காக அவரின் பயிற்சியாளர், பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோருக்கு மும்பை அணி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஐதராபாத் வந்த மும்பை வீரர்களுக்கு திலக் வர்மா சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.
மும்பை அணியின் ஆலோசகர் சச்சின் டெண்டுல்கர், கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் அனைவரையும் ஐதராபாத்தில் உள்ள தன் வீட்டிற்கு அழைத்து சென்று பிரம்மாண்ட விருந்து ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மும்பை அணியின் டேக் வரியான "ஒன் ஃபேமிலி" என்பதை திலக் வர்மா நிரூபித்துவிட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.