
3வது ஒருநாள் போட்டி
தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டி நாளை கிரிஸ்ட்சர்ச்-ல் உள்ள ஹக்லே ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி, இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே சமனிலாவது முடியும் என்பதால் தீவிர முணைப்பு காட்டி வருகிறது.

மழைக்கான வாய்ப்பு?
இந்நிலையில் இந்த போட்டியிலும் மழை வாய்ப்புள்ளதா என்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. க்ரைஸ்ட் சர்ச் நகரில் தற்போது வரை வெயில் அடித்துக்கொண்டு தான் உள்ளது. ஆனால் போட்டி நடைபெறும் நாளைய தினம் நல்ல மழை பொழியும் என்று கூறப்பட்டுள்ளதால், 3வது போட்டியும் ரத்து செய்யப்படவே வாய்ப்பு அதிகம் உள்ளது.

சிறிய வாய்ப்பு
சரியாக மதிய நேரத்தில் வானத்தில் மேக மூட்டங்கள், பனிப்பொழிவு, மழை என வானிலை மோசமாக இருக்கும் எனவும், மாலை நேரத்தில் அது சற்று குறைந்து மேகமூட்டத்துடன் மட்டும் இருக்கலாம் எனக்கூறப்பட்டுள்ளது. ஒருவேளை வருண பகவான் கருணை காட்டினால் ஓவர்கள் குறைக்கப்பட்டு, மாலையில் போட்டியை முடிக்க வாய்ப்புள்ளது.

இந்தியாவின் திட்டம்
டாஸில் வென்றாலும், தோற்றாலும் இந்திய அணி ஒரே ஒரு திட்டத்துடன் தான் களமிறங்க வேண்டும். அதாவது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் முதல் ஓவரில் இருந்தே அதிரடி காட்ட வேண்டும். அப்போது தான் டி.எல்.எஸ் முடிவு வந்தால் கூட சரியான ரன்ரேட்டுடன் இருக்க முடியும். டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா கூட இதையே தான் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.