போராட்டங்களுக்கு நடுவே 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்!!

Posted By:
கடைசி நேரத்தில் சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது

சென்னை: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோணி டாஸ் வென்று, பவுலிங் தேர்ந்தெடுத்தார். அதன்படி களமிறங்கிய கொல்கக்தா நைட் ரைடர்ஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் சேர்த்தது. ஆந்தரே ரசல், 36 பந்துகளில், 88 ரன்கள் குவித்து அசத்தினார். சென்னைக்கு 203 ரன்கள் என்ற சவாலான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு, 205 ரன்கள் எடுக்க, சிஎஸ்கேவுக்கு இரண்டாவது திரில் வெற்றி கிடைத்துள்ளது.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடர் சீசன் 11 துவங்கியுள்ளது. இதுவரை நான்கு போட்டிகள் முடிந்துள்ளன. முதலில் நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றது. இரண்டாவது ஆட்டத்தில் தமிழரான அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வென்றது. மற்றொரு தமிழரான தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சீசனின் மூன்றாவது ஆட்டத்தில் விராட் கோஹ்லியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வென்றது.

நேற்று இரவு நடந்த ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வென்றது. சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் இந்த சீசனின் 5வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

தடையால் இரண்டு ஆண்டுகள் விளையாடாமல் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மீண்டும் களமிறங்கியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் போட்டி நடக்க உள்ளதால், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பிலும், ஆர்வத்திலும் இருந்தனர். இரு அணிகளும் இதுவரை 16 முறை மோதியுள்ளன. அதில் 10 முறை சிஎஸ்கே வென்றுள்ளது. கொல்கத்தா 6 முறை வென்றுள்ளது. சென்னை மைதானத்தில் இரு அணிகளும் விளையாடிய 7 போட்டிகளில் சிஎஸ்கே 5 முறை வென்றுள்ளது.

சென்னையில் மீண்டும் போட்டி

சென்னையில் மீண்டும் போட்டி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடைசியாக, 2015 மே 10ம் தேதி சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. அதில் சிஎஸ்கே, 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 1095 நாட்களுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் மீண்டும் போட்டி நடைபெற உள்ளதால், சொந்த மண்ணில் டோணியின் சிங்கங்கள் கர்ஜனை இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

போட்டி துவங்கியது

போட்டி துவங்கியது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்துவது தங்களுடைய போராட்டங்களின் கவனத்தை திருப்பிவிடும், அதனால் ஐபிஎல் போட்டி நடத்தக் கூடாது என்று கட்சிகள் வலியுறுத்தின. இதனால், போட்டியை நடத்தக் கூடாது என்று, மிகப் பெரிய போராட்டத்தில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஈடுபட்டன. பலத்த பாதுகாப்புக்கு இடையே போட்டி துவங்கியது. இதில் டாஸை வென்ற சிஎஸ்கே கேப்டன் டோணி, முதலில் பவுலிங் தேர்ந்தெடுத்தார்.

ரசல் சிக்சர் மழை

ரசல் சிக்சர் மழை

முதலில் விளையாடிய கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்துள்ளது. சுனில் நரேன் 12, கிறிஸ் லைன் 22, நிதிஷ் ரானா, 16, உத்தப்பா 29, ரிங்கு சிங் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து விக்கெட் விழுந்த நிலையில், ஆந்தரே ரசல், தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தனர். ரசல், 36 பந்துகளில் 11 சிக்சர்களுடன் 88 ரன்கள் எடுத்தார். தினேஷ் கார்த்திக் 26 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே அணிக்கு 203 ரன்கள் என்ற சவாலான வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

மீண்டும் திரில் வெற்றி

மீண்டும் திரில் வெற்றி

சென்னை அணி முதலில் அதிரடியாக ரன் குவித்தது. 42 ரன்கள் எடுத்திருந்த ஷேன் வாட்சன், அணியின் ஸ்கோர் 75 ஆக இருக்கும்போது அவுட்டானார். அவரைத் தொடர்ந்து 39 ரன்கள் எடுத்திருந்த ராயுடு அவுட்டானார். காயமடைந்த சுரேஷ் ரெய்னா 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் டோணி 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த நிலையில், பில்லிங் அதிரடியாக விளையாடி 56 ரன்கள் சேர்த்தார். கடைசியில் 8 பந்துகளில் 19 ரன்கள் தேவை என்ற நிலையில் பிராவோ களமிறங்கினார். கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில், 19.5வது பந்தில் ஜடேஜா சிக்சர் அடிக்க சிஎஸ்கேவுக்கு இரண்டாவது திரில் வெற்றி கிடைத்துள்ளது. பிராவோ மற்றும் ஜடேஜா தலா 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன் மூலம் தான் விளையாடிய இரண்டு போட்டியிலும் வென்று, சிஎஸ்கே புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Chennai super Kings wins against kkr in another thrilling match
Story first published: Tuesday, April 10, 2018, 20:04 [IST]
Other articles published on Apr 10, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற