கணவனை பின் தொடர்ந்த மனைவி... 8ம் தேதிக்காக காத்திருக்க முடியாத அனுஷ்கா!

மும்பை : வரும் 8ம் தேதிவரை தன்னால் காத்திருக்க முடியவில்லை என்று பிரபல பாலிவுட் நடிகையும் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார்.

விராட் கோலியை தொடர்ந்து இந்திய மகளிர் அணியை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்திய அனுஷ்கா சர்மா, அரையிறுதியில் ஒரு சிறப்பான போட்டியை காண ஆவலாக இருந்ததாகவும் அதை மழை தடுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இங்கிலாந்துக்கு எதிராக இன்று நடைபெறவிருந்த போட்டி மழை காரணமாக தடைபட்டதால், புள்ளிகள் அடிப்படையில் டி20 உலக கோப்பையில் இந்திய மகளிர் அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடர் கடந்த 21ம் தேதி துவங்கி வரும் 8ம் தேதிவரை தொடர்ந்து நடைபெறவுள்ளது. வரும் 8ம் தேதி இந்த தொடரின் இறுதிப்போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

முன்னதாக ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த இந்திய மகளிர் அணி, முதலில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன மோதிய போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்தடுத்து, ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த வங்கதேசம், நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுடன் மோதி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது.

4 போட்டிகளிலும் பெற்ற வெற்றியை அடுத்து அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, இன்று சிட்னியில் நடைபெறவிருந்த அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்துடன் மோதவிருந்தது. ஆனால் சிட்னியில் அதிகாலை முதலே தொடர்ந்து பல மணிநேரங்கள் பெய்த மழை காரணமாக ஆட்டத்தை கைவிடுவதாக அம்பயர்கள் தெரிவித்தனர். இதையடுத்து புள்ளிகள் அடிப்படையில் இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில் மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய மகளிருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்திய கேப்டன் விராட் கோலி, துவக்க வீரர் கே.எல்.ராகுல் முன்னாள் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, விவிஎஸ் லஷ்மன் ஆகியோர் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தன்னுடைய கணவனை தொடர்ந்து பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் இந்திய மகளிருக்கு தன்னுடைய பாராட்டுக்களை டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையில் நடைபெறவிருந்த ஆட்டத்தின்மூலம் சிறப்பான போட்டியை கண்டுகளிக்கலாம் என்ற எண்ணத்தை மழை தவிடுபொடியாக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் வரும் 8ம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டிக்காக காத்திருக்க முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

சிட்னியிலேயே இன்று தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அடுத்த அரையிறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியும் மழையால் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், புள்ளிகள் அடிப்படையில் முதலிடத்தில் உள்ள தென்னாப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு தேர்வாகும். மேலும் மெல்போர்னில் வரும் 8ம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் தென்னாப்பிரிக்கா மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Anushka eagerly "Wanted to Witness a Great Match"
Story first published: Thursday, March 5, 2020, 16:08 [IST]
Other articles published on Mar 5, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X