
இறுதியில் இந்திய அணி
இந்திய அணி ஆசிய கோப்பை தொடருக்கு செல்லும் முன், இங்கிலாந்தில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரை இழந்து இருந்தது. அதனால், ஆசிய கோப்பையில் பலமாக அணியாக கருதப்பட்ட பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்துமா? என்ற கேள்வியோடு தொடங்கி, இறுதியில் இந்தியா ஆப்கானிஸ்தான் தவிர அனைத்து அணிகளையும் வீழ்த்திவிட்டது. அதிலும், பாகிஸ்தான் அணியை இரண்டு முறை வீழ்த்தியது.

வங்கதேசத்தின் செயல்பாடுகள்
வங்கதேச அணி மிக மோசமான செயல்பாட்டை அளித்தது. குரூப் சுற்றில் இலங்கையை வீழ்த்தியது. அடுத்து ஆப்கானிஸ்தான் அணியிடம் குரூப் சுற்றில் தோல்வி அடைந்தது. அடுத்து சூப்பர் 4 சுற்றில் இந்தியாவிடம் தோல்வி அடைந்தது. ஆப்கானிஸ்தான் அணியிடம் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஓவரில் போராடி வெற்றி பெற்றது. அடுத்து பாகிஸ்தான் அணியை வென்றால் இறுதிக்கு முன்னேறலாம் என்ற நிலையில், பாகிஸ்தானை அபாரமாக வீழ்த்தியது வங்கதேசம். இப்போது இறுதியில் இந்தியாவை சந்திக்க உள்ளது அந்த அணி.

குறைத்து மதிப்பிட வேண்டாம்
இந்திய அணி இறுதிப் போட்டியில் "வங்கதேசம் தானே.." என மேம்போக்காக இருந்து விட முடியாது. வங்கதேசம் எப்போது வேண்டுமானாலும் மீண்டு வரும் அணி. அவர்களிடம் இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்ற நிலையில் தான் பாகிஸ்தான் அணியை வீழ்த்தினார்கள். அந்த அணியில் பல பலவீனங்கள் இருக்கின்றன. முக்கிய வீரர்கள் தமிம் இக்பால், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இல்லை. எனினும், அவர்களை குறைத்து மதிப்பிட முடியாது.

பலமான இந்திய அணி வேண்டும்
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா அணித்தேர்வில் கோட்டை விட்டது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தருகிறோம் என்ற பெயரில் ஐந்து முக்கிய வீரர்கள் ஓய்வில் இருந்தார்கள். இந்தியா அந்த போட்டியில் டை மட்டுமே செய்ய முடிந்தது. இதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு இந்திய அணி தன் முழு பலத்துடன் இறுதிப் போட்டியில் இறங்க வேண்டும். எந்த புது முயற்சிகளும் இல்லாமல், சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக களமிறங்கிய அதே வீரர்கள் இறுதிப் போட்டியில் ஆட வைக்கவேண்டும். அப்போது தான் இந்தியா கோப்பையோடு நாடு வந்து சேர முடியும்.