டெல்லி : சச்சினும், கங்குலியும் பல ஆண்டுகள் ஒன்றாக இணைந்து கிரிக்கெட் விளையாடியவர்கள். அவர்களது கிரிக்கெட் வாழ்க்கை கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் ஆரம்பித்தது. இருவருக்கும் பதினான்கு வயது முதல் அனுபவம் உண்டு. சச்சினுடன் தனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களை பகிர்ந்துள்ளார் கங்குலி.
ஒரு இணைய நிகழ்ச்சியில் பேசிய போது கங்குலி, சச்சினின் சில பழக்கங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். “சச்சினை முதன் முறை பார்த்தபோது நீண்ட முடி வைத்துக்கொண்டு இருப்பார். பம்பாயில் இருந்து வந்தவர் என தெரிந்து கொண்டேன். அப்போதே அவர் மிகவும் பிரபலம். பேட்டிங் பயிற்சி செய்யும் இடத்தில் இருந்து அவரை விலக்க முடியாது. எப்போதும் பேட்டிங் செய்து கொண்டே இருப்பார். பயிற்சியாளர் வந்து மற்றவர்களுக்கும் சேர்த்து தான் இந்த பயிற்சி என கூறுவார். அப்போதே அவர் வித்தியாசமானவர் என்பதை தெரிந்து கொண்டேன்” என கூறினார்.
“இங்கிலாந்தில் ஒருமுறை இருவரும், ஒரே அறையில் தங்கி இருந்த போது இரவு எழுந்து நடக்க ஆரம்பித்தார். நான் அவர் குளியலறைக்கு சென்று இருப்பார் என நினைத்துக்கொண்டு படுத்து விட்டேன். அடுத்த நாளும் அவர் நடப்பதை பார்த்தேன். நான் எழுந்து அமர்ந்து, இரவு 1.30 மணிக்கு அவர் என்ன செய்கிறார் என யோசித்தேன். அவர் அறையை சுற்றி வந்தார். நாற்காலியில் அமர்ந்தார். மீண்டும் திரும்பி வந்து என் அருகில் படுத்துக்கொண்டார்”
“அடுத்த நாள், நான் அவரிடம் நீ என்னை பயமுறுத்துகிறாய்..இரவு என்ன செய்கிறாய்? என கேட்டேன். எனக்கு தூக்கத்தில் நடக்கும் பழக்கம் இருக்கிறது என கூறினார்” என தெரிவித்தார்.
மற்றொரு செய்தியாக, டெண்டுல்கர் எப்போது பேட்டிங்கில் சரியாக ஆடாவிட்டாலும், கனமான பேட்டை தேடுவார் என்றும், அப்போது தனது பேட்டையும் எடுத்து செல்வார் எனவும் கூறினார் கங்குலி.