
டாப் ஆர்டர் சொதப்பல்
தொடக்க வீரர் ரோகித் சர்மா 15 ரன்களுக்கு அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். இதன்பின்னர் வந்த விராட் கோலி 26 ரன்களுக்கும், ரிஷப் பண்ட் வெறும் 3 ரன்களுக்கும் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். அதிரடியாக ஆடி வந்த கே.எல்.ராகுல் 35 பந்துகளில் 51 ரன்களை அடித்துவிட்டு பெவிலியன் திரும்பினார்.
இதனால் இந்திய அணி 13.3 ஓவர்களில் 101 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

சூர்யகுமார் யாதவ் தாண்டவம்
ஆனால் சூர்யகுமார் யாதவ் ஒற்றையாளாக காப்பாற்றினார். ரசிகர்களுக்கு விருந்துபடைத்த அவர் 25 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 61 ரன்களை விளாசினார். இதனால் 20 ஓவர்களில் இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 186 ரன்களை குவித்தது. 150 நெருங்குமா என்ற சந்தேகம் இருந்த சூழலில் 180+க்கு கொண்டு சென்றார்.

பெரும் அதிர்ஷ்டம்
இந்நிலையில் இந்த போட்டியில் சூர்யகுமார் எப்போதோ அவுட்டானது தெரியவந்துள்ளது. ஆட்டத்தின் 19வது ஓவரின் கடைசி பந்தை முசர்பாணி குட் லெந்த்-ல் வீச, சூர்யகுமார் யாதவ் அதனை ஸ்கூப் ஷாட் ஆட முயன்றார். ஆனால் பந்து நேராக ஸ்டம்பிற்கு நேராக ( உடலுக்குள் ) சென்றதால் சூர்யகுமார் யாதவ் அதை மிஸ் செய்தார்.

கண்டுக்கொள்ளாத ஜிம்பாப்வே
அந்த பந்து லேசாக சூர்யகுமாரின் க்ளவுசில் உரசிவிட்டு கீப்பரின் கைகளுக்கு சென்றது. இதனை யாரும் கண்டுக்கொள்ளாத நிலையில் பவுலர் முசார்பானி மட்டும் அவுட் என அப்பீல் செய்தார். எனினும் அதற்கு அம்பயர் எந்தவித சிக்னலும் காட்டவில்லை. சூர்யகுமார் யாதவின் அதிரடியால் பதற்றத்தில் இருந்த கேப்டனும் டிஆர்எஸ் முடிவை எடுக்காமல் ஓவர் முடிந்தால் போதும் என்று இருந்துவிட்டார்.

கடைசி ஓவர் சாதனை
அந்த பந்தில் மட்டும் சூர்யகுமார் யாதவ் அவுட்டாகியிருந்தால் சூர்யகுமார் யாதவ் அரைசதத்தை பூர்த்தி செய்யாமல் 43 ரன்களுக்கு அவுட்டாகியிருப்பார். இந்திய அணியும் 170க்குள் அடங்கியிருக்கும். ஆனால் அவர்கள் செய்த தவறால் சூர்யகுமார் யாதவ் அரைசதத்துடன் சேர்த்து, டி20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும் அந்த ஓவரில் 21 ரன்களும் பறந்தது குறிப்பிடத்தக்கது.