For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முதல் 3 பந்துகளில் அம்பி, கடைசி 3 பந்துகளில் அந்நியன்.. இப்படித்தான் வங்கதேசத்தை சாய்த்தது இந்தியா

By Veera Kumar

பெங்களூர்: நேற்று நடைபெற்ற இந்தியா-வங்கதேசம் போட்டியை பார்க்காத கிரிக்கெட் ரசிகர்கள், தங்கள் வாழ்நாளிலேயே பார்க்க கிடைக்காத, ஒரு சில த்ரில் போட்டிகளில் ஒன்றை இழந்த சோகத்திற்கு சொந்தக்காரர்கள் என்று தைரியமாக சொல்லலாம்.

வங்கதேசம் பேட்டிங் செய்த அந்த கடைசி ஓவரில்தான் எத்தனை திரில்கள், எத்தனை டிவிஸ்டுகள். கிளைமேக்ஸில் ட்விஸ்ட் இருப்பது சகஜம். ஆனால் நேற்றைய போட்டியிலோ, ட்விஸ்டுக்குள்ளேயே ட்விஸ்ட் வைத்தார்கள் இந்திய வீரர்கள்.

இந்தியா-வங்கதேசம் நடுவேயான உலக கோப்பை டி20 சூப்பர்-10 சுற்று போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது.

வங்கதேசம் அசத்தல்

வங்கதேசம் அசத்தல்

டாசில் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி, வங்கதேசத்தின் துல்லிய பந்து வீச்சால் ரன் குவிக்க திணறியது. 20 ஓவர்கள் இறுதியில் இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்திய சுழல்

இந்திய சுழல்

இரண்டாவது பேட் செய்த வங்கதேசம் வலுவான அடித்தளம் அமைத்து சீராக பயணித்தது. ஆனால் நடுவே சுழற்பந்து வீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்ததால், அவ்வப்போது விக்கெட்டுகளை இழந்தது வங்கதேசம்.

12 பந்துகளுக்கு தேவை 17 ரன்கள்

12 பந்துகளுக்கு தேவை 17 ரன்கள்

18வது ஓவர் முடிவில் வங்கதேசம் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்களை எடுத்திருந்தது. அடுத்த இரு ஓவர்களுக்கு, அதாவது 12 பந்துகளுக்கு, 17 ரன்கள் எடுத்தால் போதும் வெற்றி என்ற நிலையில் வங்கதேசம் இருந்தது.

வெற்றிக்கு வாய்ப்பு

வெற்றிக்கு வாய்ப்பு

கைவசம் 4 விக்கெட்டுகள் இருந்ததாலும், ரஹிம், மஹ்மதுல்லா ஆகிய இரு அதிரடி வீரர்கள் களத்தில் நின்றதாலும், வங்கதேசம்தான் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு அந்த நாட்டு ரசிகர்களிடம் இருந்தது.

தெறிக்கவி்டட பும்ரா

தெறிக்கவி்டட பும்ரா

ஆனால், 19வது ஓவரை வீசிய இளம் வீரர் பும்ரா தனது டிரேட் மார்க் யார்க்கர்களால் பட்டையை கிளப்பிவிட்டார். ஒவ்வொரு பந்திலும் பவுண்டரி அடிக்க முயன்ற வங்கதேச பேட்ஸ்மேன்களுக்கும் கிடைத்தது ஏமாற்றமே. அந்த ஓவரில் ஆறே ரன்கள்தான் விட்டுக்கொடுத்தார் பும்ரா.

முன்னணி பவுலர்கள் கோட்டா

முன்னணி பவுலர்கள் கோட்டா

இப்போது, ஆட்டத்தின் கடைசி ஓவர். அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, நெஹ்ரா, பும்ரா என முன்னணி பவுலர்கள் அத்தனை பேரும் தங்கள் 4 ஓவர் கோட்டாவை முடித்துவிட்ட நிலையில் ஓவர் வீச தகுதியானவர்கள் என்று பார்த்தால் எஞ்சியிருந்தது ரெய்னாவும், பாண்ட்யாவும்தான்.

சிக்கிய பாண்ட்யா

சிக்கிய பாண்ட்யா

ரெய்னா ஒரு பார்ட்-டைம் ஸ்பின்னர் என்பதால், அவருக்கு கடைசி ஓவரை தருவது தற்கொலை முயற்சிக்கு சமம் என்பதை சக வீரர்களுடன் நடத்திய ஒரு நீண்ட ஆலோசனைக்கு பிறகு டோணி உணர்ந்திருந்ததாலோ என்னவோ, பாண்ட்யாவை பந்து வீச அழைத்தார்.

அப்பாடா, ஒரு ரன்

அப்பாடா, ஒரு ரன்

இளம் வீரரான பாண்ட்யா தோளில் பெரும் பாரம் இறக்கி வைக்கப்பட்டது. பாண்ட்யாவின் முதல் பந்தை மஹ்மதுல்லா சந்தித்து, ஒரு ரன் சேர்த்தபோது, இந்திய வீரர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

போச்சே, போச்சே

போச்சே, போச்சே

ஆனால் 2வது பந்தை ரஹிம் ஆப்-சைடில் பவுண்டரிக்கு விரட்டியபோது, சின்னசாமி ஸ்டேடியமே குண்டூசி விழுந்தாலும் சத்தம் கேட்கும் அளவுக்கு நிசப்தமானது. அடுத்த 4 பந்துகளில் ஆறே ரன்கள்தான் தேவை என்ற நிலை உருவானது.

ஏளன சிரிப்பு

ஏளன சிரிப்பு

அந்த ஓவரின் 3வது பந்தை பாண்ட்யா வீச, அதை ரஹிம் லெக் சைடில் திருப்ப, டோணி எவ்வளவோ டைவ் அடித்து பார்த்தும் தடுக்க முடியாமல் அந்த பந்தும் பவுண்டரிக்கு விரைந்தது. இந்திய ரசிகர்களின் ஹார்ட் ஒரு நிமிடம் நின்று போனது. களத்தில் நின்ற வங்கதேச வீரர்கள் இருவரும், கைகளை காற்றில் குத்தியபடி இந்திய வீரர்களை நோக்கி ஏளனமாக சிரித்தனர்.

எளிதானது வெற்றி இலக்கு

எளிதானது வெற்றி இலக்கு

இப்படி முதல் மூன்று பந்துகளிலுமே, வங்கதேசத்தின் ஆதிக்கம் ஏகத்துக்கும் எகிற, இப்போது ஆட்டத்தின் கடைசி 3 பந்தை பாண்ட்யா வீச வேண்டும். 2 ரன்கள் எடுத்தால் போதும், வெற்றி வங்கதேசத்துக்கு. அவ்வளவு ஏன், ஒரு ரன் எடுத்தாலும் போதும், ஆட்டம் டிராவாகிவிடும். எல்லா வகையிலும் வங்கதேசத்தின் கை அப்போது ஓங்கியிருந்தது. அந்த சூழ்நிலையில், சிறு குழந்தைகளை கேட்டால் கூட வங்கதேசம்தான் வெற்றி பெறும் என்று அடித்து கூறிவிடும்.

நடந்தது மேஜிக்

நடந்தது மேஜிக்

ஆனால், அதன்பிறகு நடந்ததுதான் மேஜிக். அம்பியாக இருந்த பாண்ட்யாவும், இந்திய பீல்டர்களும் அந்நியனாக மாறிய தருணங்கள் அவை. ஆம்.. ஆட்டத்தின் 4வது பந்தை பாண்ட்யா பிட்ச் செய்து நெஞ்சு அளவுக்கு எழுப்பிவிட, அதை டோணி பாணியில் சிக்சர் அடிக்கும் வேகத்தில் ரஹீம் லெக் சைடில் இழுத்து சுற்ற, எல்லை கோடு அருகே நின்ற தவான் கையில் அருமையாக சென்று செட்டில் ஆனது அந்த பந்து.

ட்விஸ்ட்

ட்விஸ்ட்

கதையில் அப்போது விழுந்தது முதல் டிவிட்ஸ். இருந்தாலும், எதிர்முனையில் நின்ற மஹ்மதுல்லா ஸ்டிரைக் செய்யும் முனைக்கு ஓடிவிட்டதால், எஞ்சிய 2 பந்துகளுக்கு 2 ரன் எடுப்பது பெரிய கஷ்டமில்லை என நினைத்து வங்கதேச ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்திய ரசிகர்கள், நகத்தை கடித்தபடி, சீட்டின் நுனிக்கே வந்தனர்.

வெறியால் வீழ்ந்த மஹ்மதுல்லா

வெறியால் வீழ்ந்த மஹ்மதுல்லா

ஆட்டத்தின் 5வது பந்தை பாண்ட்யா ஃபுல்டாசாக வீச மஹ்மதுல்லா அதை தரையோடு அடிக்காமல், சிக்சர் அடிக்கும் வெறியில் தூக்க, எல்லைக்கோடு அருகே நின்று ஓடிவந்து டைவ் அடித்து பிடித்தார் ரவீந்திர ஜடேஜா. டிவிஸ்டுக்குள் நடந்த அடுத்த டிவிஸ்ட் இது.

கடைசி பந்து திரில்

கடைசி பந்து திரில்

கடைசி பந்தை சுவகடா சந்திக்க, தேவைப்பட்டது என்னவோ, அதே 2 ரன்கள். 1 ரன் அடித்தாலும் போட்டி டிரா ஆகி, சூப்பர் ஓவருக்கு வழி வகுத்துவிடும் என்பதால், ஃபீல்டர்கள் அத்தனை பேரும் இன்னர் சர்க்கிளுக்கு உள்ளே நிறுத்தப்பட்டனர்.

சிக்கலியே, சிக்கலியே

சிக்கலியே, சிக்கலியே

ஆட்டத்தின் கடைசி பந்தை பாண்ட்யா ஆப் சைட் திசையில் பிட்ச் செய்து, சற்று வைடாக வீசினார். பந்து பேட்டின் முன்பு வரும் என நினைத்திருந்த சுவகடா, எதிர்பாராத அந்த பந்தால், சற்று தடுமாறி, அதை எகிறி அடிக்க முற்பட்டார். ஆனால் பந்து பேட்டில் படாமல் விக்கெட் கீப்பர் டோணியிடம் சென்றது.

ஓடுடா டிராவுக்காக

ஓடுடா டிராவுக்காக

ஒரு ரன் ஓடிவிட்டால் போட்டி டிராவாகிவிடும் என்பதால், எதிர்முனையில் நின்ற முஸ்தபிசுர் அதிவேகமாக ஓட ஆரம்பித்தார். இதையடுத்து சுவகடாவும், பவுலர் என்ட்டை நோக்கி ஓட ஆரம்பித்தார். ஆனால் டோணியோ, பந்தை ஸ்டெம்பை நோக்கி எரிந்தால் கூட படாமல் செல்ல வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து பந்தை கையில் வைத்துக்கொண்டு ஓடி வந்து ஸ்டம்பை பதம் பார்த்தார்.

டோணியின் மின்னல் ஓட்டம்

டோணியின் மின்னல் ஓட்டம்

ரன்-அவுட்டா இல்லையா என்பதை அறிய 3வது நடுவர் முடிவுக்கு விடப்பட்டது. இரு நாட்டு ரசிகர்கள் இதயங்களிலும் லப்-டப் ஒலி ஓசை அதிகரித்தது. ஆனால் பெரிய திரையில் அவுட் என எழுத்து வந்தபோது, இந்திய ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். வங்கதேச ரசிகர்கள் வழக்கம்போல தேம்பி, தேம்பி அழுதனர்.

விஸ்வரூபம்

கடைசி 3 பந்துகளில் இரண்டு ரன்கள் மட்டும் தேவை என்ற நிலையில் கூட, பக்குவம் இல்லாமல், ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியதால் வங்கதேசம் தோற்றது என்றாலும் கூட, அதுவரை சொதப்பிய இந்திய பீல்டர்கள் கடைசி 3 பந்துகளில் விஸ்வரூபம் எடுத்ததும் வெற்றிக்கு வழி வகுத்தது. வேதாளம் திரைப்படத்தில் அப்பாவியாக காட்சியளித்த, அஜீத் அதிரடியாக மாறும் சீனை வைத்து மீம்ஸ் போட்டு வருகிறார்கள் சமூக வலைத்தளவாசிகள்.

Story first published: Thursday, March 24, 2016, 11:43 [IST]
Other articles published on Mar 24, 2016
English summary
India have pulled off a heist. What scenes at the Chinnaswamy stadium. If you are an Indian supporter that is the place to be tonight. Drama, emotions and what not. Everything running high.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X