
கடைசி கால கிரிக்கெட்
2018இல் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை கிட்டத்தட்ட தன் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது என்பதே உண்மை. 2019 உலகக்கோப்பையுடன் தோனி கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளார் என கூறப்படும் நிலையில், தன் கடைசி கால கிரிக்கெட் போட்டிகளில் பேட்டிங்கில் தோனி தடுமாறி வருகிறார்.

கீப்பிங் சூப்பர்
அதே சமயம் கீப்பிங்கில் அந்த வேகம் இன்னும் குறையவில்லை. மேலும், அணி வீரர்களுக்கு தரும் யோசனைகள், முக்கிய நேரங்களில் கேப்டனுக்கு தரும் அறிவுரைகள் என தன் முக்கியத்துவத்தை தோனி உணர்த்தாத நேரம் என்பது பேட்டிங் தவிர குறைவு தான்.

பேட்டிங்கில் வேகம் இல்லை
2018இல் தோனி 20 ஒருநாள் போட்டிகளில் ஆடி 275 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 13 முறை பேட்டிங் ஆடும் வாய்ப்பு பெற்றார் தோனி. அதில் ஐந்து முறை 30 ரன்களுக்கும் மேல் எடுத்துள்ளார். இது ஒன்றும் அத்தனை மோசம் இல்லை என சிலர் கூறினாலும், அவர் ரன் குவிக்கும் வேகம் தான் பெரிய பிரச்சனையாக மாறி உள்ளது. முதல் சில ஓவர்களை வீணடித்த பின்னரே தோனி ரன் அடிக்க ஆரம்பிக்கிறார் என்ற குற்றச்சாட்டு இவர் மீது வைக்கப்பட்டது.

ஐபிஎல் தொடரில் அசத்தல்
ஆனால், இதே தோனி 2018 ஐபிஎல் தொடரில் அச்சுறுத்தும் வீரராக விளங்கினார். ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் 455 ரன்கள் எடுத்தார். இதன் சராசரி 75.83 என்பது குறிப்பிடத்தக்கது. தடை காலம் முடிந்து மீண்டும் உள்ளே வந்த சிஎஸ்கே அணிக்கு தோனி கேப்டனாக தொடர்ந்தார். அனுபவ வீரர்கள் கொண்ட அணியை கட்டமைத்த தோனி சிஎஸ்கே அணியை மூன்றாவது முறை கோப்பை வெல்ல வைத்து அசத்தினார்.

அடுத்த ஆண்டு ஓய்வு?
2௦18ஆம் ஆண்டு தோனிக்கு சரியில்லை என கூறினாலும், அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துடன் (உலகக்கோப்பையுடன்) தங்கள் "தல தோனி" ஓய்வு பெறப் போகிறார் என செய்திகள் வருவதால், அவரது ரசிகர்கள் தோனி ஆடும் எந்த போட்டியையும் விடுவதில்லை என கொண்டாட காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.