உலகக் கோப்பை ஹாக்கிக்கு பாகிஸ்தான் வருவது கன்பர்ம்

Posted By: SRIVIDHYA GOVINDARAJAN

டெல்லி: ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் நடக்க உள்ள உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் அணி வருவது உறுதியாகி உள்ளது.

14வது உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்தாண்டு நவம்பர் 18 முதல் டிசம்பர் 16 வரை ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் நடக்கிறது. மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் பங்கேற்கும் என, உலக ஹாக்கி கூட்டமைப்பு உறுதி செய்துள்ளது.

Pakistan coming

இந்தியா, பாகிஸ்தான் இடையேயான உறவு சரியாக இல்லை. அதனால், கடந்த சில ஆண்டுகளாகவே, இரு நாடுகளுக்கும் இடையே எந்த விளையாட்டுப் போட்டிகளும் நடக்கவில்லை.

கடந்த மாதம் நடந்த பார்வையற்றோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடப்பதாக இருந்தது. ஆனால், அதில் பங்கேற்க முடியாது என, முன்னாள் சாம்பியனான இந்தியா கூறியது. அதையடுத்து அந்தப் போட்டி யு.ஏ.இ.,யில் நடந்தது. அதில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது. அரை இறுதியில், பாகிஸ்தானுடன் மோதியது.

இரு நாட்டு கிரிக்கெட் அணிகளும், 2013க்குப் பிறகு இதுவரை சுற்றுப்பயணம் ஏதும் மேற்கொண்டதில்லை. பாகிஸ்தான் கபடி, ஸ்குவாஷ், மல்யுத்த அணிகளும், கடந்தாண்டு இந்தியாவில் நடந்த போட்டிகளில் பங்கேற்க மறுத்தன.

இந்த நிலையில், உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி புவனேஸ்வரில் நடக்க உள்ளது. நான்கு முறை உலகக் கோப்பையை வென்று, அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற நாடான பாகிஸ்தான், இந்தியாவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

கடந்த, 2014 உலகக் கோப்பைக்கு தகுதி பெறாத பாகிஸ்தான் அணி, இந்த முறை போட்டியில் பங்கேற்கும் என, உலக ஹாக்கி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக எந்த அணியும் கூறவில்லை. அதேபோல், குறிப்பிட்ட அணி வரக் கூடாது என, போட்டியை நடத்தும் இந்தியாவும் கூறவில்லை. அதனால் பாகிஸ்தான் அணி வருவது உறுதி என்று கூட்டமைப்பு கூறியுள்ளது.

இந்த உலகக் கோப்பைக்கு, இந்தியா, பாகிஸ்தானைத் தவிர, இங்கிலாந்து, மலேசியா, கனடா, சீனா, பெல்ஜியம், ஜெர்மனி, நியூசிலாந்து, ஸ்பெயின், அயர்லாந்து, பிரான்ஸ், அர்ஜென்டினா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க அணிகளும் தகுதி பெற்றுள்ளன.

Story first published: Friday, February 16, 2018, 14:45 [IST]
Other articles published on Feb 16, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற