
யார் கார்த்தி செல்வம்
அரியலூரை சேர்ந்த கார்த்திக் செல்வம் சமீபத்தில் நடந்த FIH ஹாக்கி ப்ரோ லீக் தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமானார். 21 வயதே ஆகும் அவர், தனது முதல் போட்டியிலேயே நியூசிலாந்து அணிக்கு எதிராக 2 முக்கியமான கோல்களை அடித்து வெற்றியை தேடிக்கொடுத்தார். இதனால் தமிழகத்தில் நிறைய திறமையான வீரர்கள் இருப்பதாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

குடும்ப சூழல்
இந்திய அணிக்கு அறிமுகமானாலும் கார்த்தி செல்வம், மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். அவரின் தந்தை மாதம் ரூ.5,000 சம்பளத்திற்கு காவலாளியாக பணியாற்றி வருவதாக தெரிகிறது. அவரின் ஏழ்மை நிலை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

முதல்வரின் பரிசு
இந்நிலையில் கார்த்தியின் நிலையை அறிந்து முதல்வர் ஸ்டாலின் நேரடியாக கார்த்தியின் வீட்டிற்கே சென்றுள்ளார். அவரின் வீட்டிற்கு சென்று மேலும் உயர்வதற்கு வாழ்த்துக்களை கூறிய முதல்வர், புதிதாக அவருக்கு ஒரு வீட்டையும் பரிசாக கொடுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார். இது தமிழக மக்களிடையே வெகுவாக பாராட்டை பெற்று வருகிறது.

இந்திய அணியின் ட்வீட்
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள இந்திய ஹாக்கி அணி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த செயலுக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். கார்த்திக்கு அவர் கொடுத்துள்ள பரிசால், தமிழகத்தில் இருந்து இன்னும் பல வீரர்கள் ஹாக்கிக்கு முக்கியத்துவம் கொடுத்து சிறந்த பங்களிப்பை கொடுக்க ஊக்குவிப்பாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.