
ஜூலை 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் திட்டமிடப்பட்டிருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டித் தொடர் கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு ஜூலை 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் ஜப்பான்
பிரதமர் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டு இந்த ஒத்திவைப்பை அறிவித்தனர்.

சவாலான தொடர்
இந்நிலையில் இந்த ஆண்டும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுவது மிகவும் சவாலாகவே காணப்படுகிறது. சர்வதேச அளவில் 100 மில்லியன் மக்கள் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இதுவரை 20 லட்சம் மக்கள் இந்த பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

குறைவான காலகட்டம்
இந்நிலையில் ஒரே இடத்தில் 200 நாடுகளை சேர்ந்த 11,000 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஒருங்கிணைத்து ஒலிம்பிக் போட்டித் தொடரை நடத்துவது என்பது மிகுந்த சவாலான விஷயமாகவே காணப்படுகிறது. இன்னும் 6 மாதத்திற்கும் குறைவான காலகட்டமே உள்ள நிலையில் இந்த தொடரை ஜப்பான் எவ்வாறு திட்டமிட்டு செயல்படுத்த உள்ளது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

தாமஸ் பாக் அறிவிப்பு
ஆயினும் இந்த போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் திட்டவட்டமாக நேற்றைய தினம் அறிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்யும் எண்ணமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஆயினும் பாதுகாப்பான முறையில் இந்த போட்டிகளை நடத்துவது என்பது மிகுந்த சவாலான விஷயமாகவே உள்ளது.

11,000 வீரர்கள்... 306 போட்டிகள்
கடந்த 2016ல் ரியோ டி ஜெனிரோவில் 206 நாடுகளை சேர்ந்த 11,000 வீரர்கள் 306 வித்தியாசமான போட்டிகளில் பங்கேற்று விளையாடினர். 37 இடங்களில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டன. 25,000க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் உலகெங்கிலும் இருந்து இந்த போட்டிகளுக்காக குவிந்தனர்.

ஜப்பானில் 3வது அலை
ஜப்பானில் 3வது அலை கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது டோக்கியோவில் திட்டமிடப்பட்டுள்ள இந்த ஒலிம்பிக் போட்டிகளை அதன் நிர்வாகிகள் எவ்வாறு மேற்கொள்ள உள்ளார்கள் என்ற கேள்விக்கு பதிலளிப்பது மிகவும் சிரமமானதுதான்.

சமாளிக்கும் சிரமம்
11,000 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஒரே இடத்தில் தங்க வைக்கப்படும்போது ஒரு வீரருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் அது மிகவும் நெருக்கடியான சூழலை ஏற்படுத்திவிடும். அத்தகைய சூழலில் ஒலிம்பிக் கமிட்டி எந்த மாதிரியான நடவடிக்கையை எடுக்கும் என்பதும் மில்லியன் டாலர் கேள்விதான்.