வாஷிங்டன் : அமெரிக்காவில் நடைபெறும் NFL எனப்படும் ரக்பி (அமெரிக்க கால்பந்து) தொடரில், வீரர்கள் இனவாதத்திற்கு எதிராக தேசிய கீத புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
பல மாதங்களாக தொடரும் இந்த போராட்டத்தில் இனியும் வீரர்கள் ஈடுபட்டால், அவர்களை போட்டியிலிருந்தும், தொடரில் இருந்தும் நீக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு போட்டிக்கான சம்பளத்தை வழங்கக்கூடாது எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.
எதற்காக இந்த போராட்டம்?
அமெரிக்க அதிபர் பதவிக்கு டிரம்ப் போட்டியிட்ட காலத்தில், அமெரிக்காவில் பல கறுப்பினத்தவர்கள் பல்வேறு சம்பவங்களில் காவல்துறையால் சுடப்பட்டு உயிரிழந்தார்கள். அதே சமயத்தில், டிரம்ப் அரசியல் மேடைகளில் இனவாதத்தை ஆதரிக்கும் வகையில் பேசி வந்தார். இதனால், மனம் வெதும்பிய சில விளையாட்டு வீரர்கள் ஆட்டம் தொடங்கும் முன் ஒலிபரப்பப்படும் அமெரிக்க தேசிய கீதத்தை புறக்கணிக்கும் வகையில், ஒரு காலை மண்டியிட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தார்கள். நாளடைவில், பல வீரர்களும் இன பேதமின்றி இந்த போராட்டத்தில் பங்கு பெற்று வருகிறார்கள். கிட்டத்தட்ட, இது அதிபர் டிரம்ப்புக்கு தெரிவிக்கும் எதிர்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
போராட்ட உரிமையை பறிப்பதா?
இரண்டு வருடங்களாக நடந்து வரும் இந்த போராட்டத்தை எப்படி தடுப்பது என தெரியாமல் திணறிய NFL விளையாட்டு அமைப்பு மற்றும் கிளப்கள், போராட்டம் தொடர்பான சில கட்டுப்பாடுகளை வீரர்கள் பின்பற்ற வேண்டும் எனக் கூற, வீரர்கள் கூட்டமைப்பு அதை கடுமையாக எதிர்த்தது. புதிய கட்டுப்பாடுகள் வீரர்களின் போராடும் உரிமையை பறிக்கும் செயல் என எதிர்த்தன. இதையடுத்து, NFL மற்றும் NFL வீரர்கள் கூட்டமைப்பு, தேசிய கீத எதிர்ப்பு போராட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என கூட்டறிக்கை வெளியிட்டது.
போராட்டத்தை முடக்க நினைக்கும் டிரம்ப்
இதைப் பார்த்து கடுப்பான டிரம்ப் தன் ட்விட்டர் பதிவில், “இன்னுமா NFL தேசிய கீத சர்ச்சை உயிர்ப்போடு இருக்கிறது. இதை நம்ப முடியவில்லை! ஒப்பந்தத்திலேயே வீரர்கள் எழுந்து நின்று (தேசிய கீதம் ஒலிக்கும் போது), இதயத்தில் கை வைக்க வேண்டும் என இன்னும் கூறவில்லையா? கமிஷனர் கண்டிப்பாக ஒரு முடிவை எடுக்க வேண்டும். முதல் முறை மண்டியிட்டால், ஒரு விளையாட்டிலிருந்து நீக்க வேண்டும். இரண்டாவது முறை மண்டியிட்டால், ஒரு சீசன் நீக்கம் மற்றும் சம்பள நிறுத்தம் செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.
இந்த சர்ச்சையால் பாதிப்பு வராமல் இருக்க NFL அணிகளின் நிர்வாகிகள், தங்கள் வீரர்களிடம், போராட விரும்புபவர்கள் தேசிய கீதம் ஒலித்து முடிக்கும் வரை, உடை மாற்றும் அறையிலேயே இருக்குமாறு வலியுறுத்துவதாக கூறப்படுகிறது. ஆனாலும், இன்னும் இந்த விஷயத்தில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இந்த போராட்டதிற்கு, ரசிகர்கள், விளம்பரதாரர்கள் என அனைவரும் இரு பிரிவுகளாக இருந்து போராட்டத்தை ஆதரித்தும், எதிர்த்தும் வருகிறார்கள்.