இந்த முறையாவது பதக்கம் வெல்ல வேண்டும்- ககன் நரங் உறுதி!

Posted By:
Gagan Narang
டெல்லி: ஒலிம்பிக் போட்டியில் 3வது முறையாக பங்கேற்கும் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங், இந்த முறை நிச்சயம் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் உள்ளார்.

லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் 13 போட்டிகளில் இந்திய அணி தரப்பில் மொத்தம் 81 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் இந்திய துப்பாக்கி சுடுதல் அணியில் அபினவ் பிந்த்ரா, ககன் நரங், ஹரி ஓம் சிங், ரோஹன் சோதி, வினய் குமார், ராஹி சர்னோம்பட், அன்னு ராஜி சிங், சாகன் செளத்ரி, குயங்சோ உள்ளிட்ட 9 பேர் தகுதிப் பெற்றுள்ளனர்.

இதில் அபினவ் பிந்த்ரா கடந்த 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர். இதேபோல ககன் நரங் கடந்த 2004 ஏதேன்ஸ், 2008 பெய்ஜிங் ஆகிய ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டார். ஆனால் அவருக்கு பதக்கம் எதுவும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் 3வது முறையாக ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதை தனது பாக்கியமாக கருதும் ககன் நரங், இந்த முறை பதக்கம் வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் உள்ளார்.

சமீபகாலமாக நல்ல பார்மில் உள்ள ககன் நரங், கடந்த 2010 டெல்லி காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 4 தங்கப்பதக்கங்களை வென்றார். பின்னர் சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் 2 வெள்ளிப்பதக்கமும், பாங்காக்கில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் புதிய உலக சாதனை படைத்தார்.

இந்த நிலையில் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ககன் நரங் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பார் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து அவர் கூறியதாவது:

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதன் மூலம் 3வது முறையாக ஒலிம்பிக் போட்டியில் விளையாட எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை எனது பாக்கியமாக கருதுகிறேன். ஒலிம்பிக் போட்டி என்பது ஒவ்வொரு விளையாட்டு வீரரின் கனவு. எனவே அதன் முக்கியத்தை தெளிவாக அறிந்துள்ளேன்.

பல ஆண்டுகளாக நாட்டிற்கு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வருவதால், தற்போது வெற்றிக்கான படிகளை தெளிவாக அறிந்துள்ளேன். நான் ஒலிம்பிக் பதக்கம் வெல்வேன் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Story first published: Saturday, July 14, 2012, 12:10 [IST]
Other articles published on Jul 14, 2012

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற