இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் ஸ்பாட் பிக்ஸிங் செய்த குற்றச்சாட்டில் சிக்கிய கிரிக்கெட் வீரர் நசிர் ஜம்ஷத்துக்கு பத்து வருட தடை விதித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு.
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு பிஎஸ்எல் (PSL) எனப்படும் டி20 தொடரை நடத்தி வருகிறது. அதன் இரண்டாவது சீசனின் போது ஏராளமான பிக்ஸிங் புகார்கள் கிளம்பின. அதில் பல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் அடிபட்டன. இதனால், பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு பெரும் அழுத்தம் ஏற்பட்டது.
இதையடுத்து, அந்த வீரர்கள் மீது விசாரணையை துவக்கியது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு. அதில் இதுவரை ஐந்து வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது ஆறாவது வீரராக நசிர் ஜம்ஷத்துக்கு பத்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்எல் ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக ஜம்ஷத் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன. ஏற்கனவே, அவர் விசாரணைக்கு ஒத்துழைக்காததால் ஒரு வருடம் வரை தடை பெற்றார்.
இதுபற்றி பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அதிகாரி ஒருவர், “இந்த பிக்ஸிங் சர்ச்சைகள் ஜம்ஷத்தின் தண்டனையோடு முடிவுக்கு வந்துள்ளது. வருத்தமடையும் வகையில், மற்றொரு வீரர் தன் கிரிக்கெட் வாழ்வை பாழாக்கிக் கொண்டார்” என கூறியுள்ளார்.
ஜம்ஷத் திறமை வாய்ந்த தொடக்க வீரராக கண்டறியப்பட்டார். இதுவரை, 2 டெஸ்ட், 48 ஒருநாள் போட்டிகள், 18 டி20 போட்டிகள் ஆடி இருக்கிறார். 2௦15 உலகக்கோப்பை போட்டிகளின் போது சரியாக விளையாடாத காரணத்தால் அணியில் இடம் கிடைக்காமல் போனது.
இந்தியாவிற்கு எதிராக 2012 வருடத்தில் நடந்த ஒருநாள் தொடரில் தொடர்ந்து மூன்று சதங்கள் அடித்தது தான் இவரது சிறப்பான செயல்பாடு என்பது குறிப்பிடத்தக்கது.