For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இங்கிலாந்துடன் முதல் ஒருநாள் : கடைசி பந்துவரை போராடி 9 ரன்களில் இந்தியா தோல்வி!

By Mathi

ராஜ்கோட்: முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்கள் மிகவும் பொறுப்புடன் மிகப் பெரிய ஸ்கோரை சேஸ் செய்து தொட்டுவிடும் தூரத்தில் இருந்த போதும் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவ நேரிட்டது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இன்று காலை குஜராத்தின் ராஜ்கோட்டில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து, இந்தியாவை பந்துவீச அழைத்தது.

பிரிக்க முடியாத தொடக்க வீரர்கள்

இங்கிலாந்து அணியின் கேப்டன் குக், பெல் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக அந்நாட்டு வீரர்கள் ஆடினர். எந்த பந்தையும் வீணாக்காமல் ரன்களை மளமளவென குவித்தனர். 10 ஓவர், 20 ஓவர் கடந்து அந்த அணியின் ஸ்கோர் 158 எட்டும் வரை இந்திய பத்துவீச்சாளர்களால் தொடக்க வீரர்கள் இருவரையும் பிரிக்க முடியவில்லை.

England Team
இந்திய அணியின் புவனேஷ்குமார், இசாந்த் ஷர்மா, அசோக் திண்டா, அஸ்வின், ஜடேஜா ஆகிய அனைவருமே ஜோடியை பிரிக்க படாதபாடுபட்டனர். இங்கிலாந்தின் கேப்டன் குக் 80 பந்துகளில் 73 ரன்களும் பெல் 96 பந்துகளில் 85 ரன்களும் எடுத்த நிலையில் பெல் ரஹானேவால் ரன் அவுட் ஆக்கப்பட்டார்.. அப்போதுதான் இந்திய வீரர்கள் பெருமூச்சுவிட்டனர்!

பெல் அவுட் ஆன பிறகு ஒரு சில ஓவர்கள் தாக்குப் பிடித்த கேப்டன் குக் 83 பந்துகளில் 75 ரன்கள் எடுத்த நிலையில் 31.1வது ஓவரில் அவுட் ஆனார். பின்னர் ஆடிய மோர்கன், பீட்டர்சன் ஆகியோரும் ரன்களை மளமளவென குவித்தனர். மோர்கன் 38 பந்துகளில் 41 ரன்களையும் பீட்டர்சன் 45 பந்துகளில் 44 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

ரன்கள் கொட்டிக் குவித்த கடைசி ஓவர்கள்

கடைசி ஓவர்களில் இந்திய அணியின் பந்துகளை கீஸ்வெட்டர் மற்றும் படேல் நொறுக்கிவிட்டனர். கீஸ்வெட்டர் 20 பந்துகளில் 24 ரன்களையும் படேல் 19 பந்துகளில் 42 ரன்களையும் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 325 ரன்களை இங்கிலாந்து அணி எடுத்தது. இந்திய அணி வெற்றி பெற 326 ரன்களை இலக்காக இங்கிலாந்து நிர்ணயித்தது.

86 ரன்கள் கொடுத்த இஷாந்த் சர்மா

இந்திய அணியில் இஷாந்த் சர்மா 10 ஓவர்கள் வீசி 86 ரன்களை அள்ளிக் கொடுத்தார். ஆனால் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. அஸ்வினும் 9 ஓவர்கள் வீசி 61 ரன்களைக் கொடுத்து விக்கெட் எடுக்கவில்லை. கோஹ்லி ஒரு ஓவர் வீசி 9 ரன்களைக் கொடுத்தார். இந்தியாவின் பந்துகள் அனைத்தையுமே ரன்களாக்கியிருக்கின்றனர் இங்கிலாந்து வீரர்கள்.

பொறுப்பான இந்தியாவின் ஆட்டம்

இந்த இலக்கை இந்திய அணி எப்படி எட்டப்போகிறதோ? என்ற எதிர்பார்ப்புடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரஹானேவும் கம்பீரும் களம் இறங்கினர். இதுவரை தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகிப் போவதுதான் வழக்கமாக இருந்தது. இம்முறை சற்றே ஆறுதலாக விளையாடினர். 96 ரன்கள் வரை ரஹானேவும் கம்பீரும் தாக்குப் பிடித்தனர். 57 பந்துகளில் 47 ரன்கள் எடுத்த நிலையில் 16.4வது ஓவரில் அவுட் ஆனார் ரஹானே. அடுத்த 2 ஓவரில் 52 பந்துகளில் 52 ரன்களை எடுத்திருந்த கம்பீரும் அவுட் ஆனார்.

யுவராஜ் செம ஆட்டம்

பின்னர் 22 பந்துகளில் 15 ரன்களை எடுத்திருந்த கோஹ்லி அவுட் ஆக யுவராஜ்சிங்கும் ரெய்னாவும் ஆடினர். 30-வது ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களை எடுத்திருந்தது. இருவரும் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்துவதில் முனைப்பு காட்டினர். 54 பந்துகளில் 61 ரன்களை அடித்திருந்த யுவராஜ் 34.4வது ஓவரில் அவுட் ஆனார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 198 ஆக இருந்தது.

அரைசதம் கடந்த ரெய்னா

தொடர்ந்து ரெய்னாவுடன் கேப்டன் டோணி கை கோர்த்தார். ரெய்னாவும் இன்று பொறுப்புடன் விளையாடி பந்துக்கு பந்து ரன்கள் என்பதை இலக்காக கொண்டு ஆடினார். இந்திய அணி 231 ரன்கள் எடுத்த நிலையில் 40 வது ஓவரில் ரெய்னா அவுட் ஆனதாக சர்ச்சை வந்தது. ஆனால் ரெய்னா அவுட் சர்ச்சையில் தப்பி அரைசதத்தைத் தொட்டார். 49 பந்துகளில் 50 ரன்களை அவர் எடுத்தார். டோணியோ 14 பந்துகளில் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அடுத்த பந்தை அவர் சிக்சருக்கு விரட்ட அவரும் சக வீரர்களைப் போல பந்துக்கு பந்து ரன் என்ற இலக்கில் இணைந்தார். இந்த உற்சாகமான தருணத்தில் சுரேஷ் ரெய்னா அவுட் ஆனார். அப்போது இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்களை எடுத்திருந்தது.

நம்பிக்கை கொடுத்து 'வெளியேறிய' டோணி

50 பந்துகளில் 83 ரன்களை எடுக்க வேண்டிய ஒரு நிலையில் கேப்டன் டோணியுன் ஜடேஜா கை கோர்த்தார். டோணி தொடர்ந்தும் 'சிக்சர்'களை வெளுக்கத் தொடங்கினார். இதனால் ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கை உருவானது. ஒரே ஓவரில் 2 சிக்சர் அடித்து அசத்தினார் அவர். அடுத்த ஓவரில் டோணி ஒரு சிக்சர் அடிக்க ஜடேஜாவும் கை கோர்த்து இந்தியாவின் வெற்றி நம்பிக்கையை அதிகரிக்க வைத்தனர். இந்த நம்பிக்கையை தகர்க்கும் வகையில் 25 பந்துகளில் 32 ரன்களை எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்துவிட்டு வெளியேறினார். 6 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் என்ற நிலையில் இந்திய அணி இருந்தது. இதனால் இந்திய ரசிகர்களிடம் சோர்வு ஏற்பட்டது. களத்தில் இருந்த ஜடேஜாவுடன் அஸ்வின் இணைந்தார்.

கடைசி ஓவர்களில் தடுமாறிய இந்தியா

ஆனால் ஜடேஜாவும் 2 ரன்கள் கூடுதலாக எடுத்த நிலையிலேயே அதே ஓவரில் அவுட் ஆகிப் போக மைதனாமே நிசப்தமாகிப் போனது. அவர் 9 பந்தில் 7 ரன்கள்தான் எடுத்தார். இதனால் இந்தியாவின் வெற்றி பின்வரிசை இளம் வீரர்களின் தோளில் ஏறியது. அஸ்வினுடன் புவனேஷ்குமார் இணைந்தார். 28 பந்துகளில் 52 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இந்தியா இருந்தது. 46,47வது ஓவர்களில் ஆறுதல்பட்டுக் கொள்ளும் வகையில் இருவரும் பவுண்டரிகள் அடித்தனர். 48-வது ஓவரில் அஸ்வின் அவுட் ஆகிவிட இந்தியாவின் வெற்றி சந்தேகமே என்பதாகிவிட்டது. அஸ்வின் 8 பந்துகளில் 13 ரன்களை எடுத்திருந்தார். வெற்றி இலக்கான 326 ஐ எட்ட இந்திய அணி 15 பந்துகளில் 29 ரன்களை எடுத்தாக வேண்டிய நிலை இருந்தது. புவனேஷ்குமாருடன் திண்டா கைகோர்த்தார். புவனேஷ் 48வது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்து இந்தியாவின் ஸ்கோரை 300ஐத் தாண்ட வைத்தார். ஆனால் அணியின் ஸ்கோர் 307 ஆக இருந்த நிலையில் 4 பந்துகளில் 3 ரன்களை அடித்திருந்த அசோக் திண்டா அவுட் ஆனார். பின்னர் இஷாந்த் சர்மா களத்துக்கு வந்தார். அப்போது 7 பந்தில் 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது இந்தியா.

த்ரில் ஓவர்

ஏதாவது மிராக்கிள் நடந்துவிடாதா என்ற எதிர்பார்ப்புடன் கடைசி ஓவர் தொடங்கியது. இஷாந்த் சர்மாவும் தம்மால் முடிந்த பொறுப்பை வெளிப்படுத்தி ஆடிக் கொண்டிருந்தார். 3 பந்தில் 13 ரன்கள் என்ற நிலை இருந்தது. ஆனால் இவ்வளவு பெரிய ஸ்கோரை மிகவும் பொறுப்பாக சேஸ் செய்து வந்த இந்திய அணியால் கடைசி வரை எட்ட முடியாமல் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவ நேரிட்டது ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்திய அணி 50-வது ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு மொத்தம் 316 ரன்கள் எடுத்திருந்தது.

இந்தியாவின் தோல்வி 'கெளரவமான'தே!

Story first published: Friday, January 11, 2013, 20:05 [IST]
Other articles published on Jan 11, 2013
English summary
England won the toss on Friday and chose to bat against hosts India in the first ODI at Rajko
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X