
அணிகள் செயல்பாடு எப்படி?
பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் இந்திய அணி சிறந்து விளங்கியது. இலங்கை அணி பந்துவீச்சில் கொஞ்சம் பரவாயில்லை என்பது போல செயல்பட்டாலும், பேட்டிங்கில் மொத்தமாக சொதப்பியது. அந்த அணியில், சுமார் ஏழு பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.

நான்கு அரைசதம்
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆட முடிவு செய்தது. இந்திய அணியில் முதல் ஐந்து பேட்ஸ்மேன்களே ஐம்பது ஓவர்களை ஆடி முடித்தனர். இதில் நான்கு பேர் அரைசதம் அடித்தனர். துவக்க வீரர்கள் ஜெய்ஸ்வால், அனுஜ் ராவத் அரைசதம் அடித்து சிறப்பான துவக்கம் அளித்தனர்.

கடைசி 10இல் 100
4வது மற்றும் 5வது இடத்தில் இறங்கிய சிம்ரன் சிங் மற்றும் பதோனி கடைசி பத்து ஓவர்களில் 100 ரன்களுக்கும் மேல் எடுத்து ஆட்டத்தில் முக்கிய பங்காற்றினர். இவர்கள் இருவரும் அரைசதம் அடித்தனர். இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு, 304 ரன்கள் எடுத்து இருந்தது.

ஹர்ஷ் தியாகி அசத்தல்
அடுத்து ஆடிய இளம் இலங்கை அணியில் பெர்னாண்டோ மற்றும் பரனவிதானா இருவரும், 49 மற்றும் 48 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொதப்பினர். இலங்கை வீரர்கள், இந்தியாவின் சுழல் பந்துவீச்சாளர் ஹர்ஷ் தியாகி பந்தில் வரிசையாக வெளியேறினர். ஹர்ஷ் சிறப்பாக பந்துவீசி 6 விக்கெட்கள் வீழ்த்தினார். இலங்கை அணி 38.4 ஓவர்களில் 160 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்த வெற்றி மூலம் இந்திய அண்டர் 19 அணி தன் ஆறாவது ஆசிய கோப்பையை வென்று அசத்தியுள்ளது. சென்ற மாதம், ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி ஏழாவது ஆசிய கோப்பையை வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.