இந்திய கிரிக்கெட் அணியை ஒபாமா நேரில் அழைத்துக் கெளரவிப்பாரா?

Posted By:

டெல்லி: கிரிக்கெட்டுக்கு சற்றும் சம்பந்தமில்லாத அமெரிக்காவிலிருந்தும் இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து வந்துள்ளது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் சார்பில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் டிமோதி ரோமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Barack Obama

இதனால் இந்திய கிரிக்கெட் அணியை அதிபர் ஒபாமா நேரில் அழைத்து பாராட்டி விருந்தளித்துக் கெளரவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவை நேற்று ரோமர் சந்தித்தார். அப்போது ஒபாமாவின் சார்பில் இந்திய கிரிக்கெட் அணியை, குறிப்பாக நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர், கேப்டன் டோணி ஆகியோரைப் பாராட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

சச்சின் குறித்து ரோமர் கூறுகையில், கடந்த 21 ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடிவரும் சச்சின், தனது வாழ்நாள் கனவை நனவாக்கியிருப்பது விசேஷமானது. அதேபோல எந்தவிதமான பிசிரும் இல்லாமல், மிகவும் துல்லியமாகவும், சிறப்பாகவும் முடிவெடுக்கும் கேப்டன் டோணியின் தலைமைத்துவம் பாராட்டுக்குரியது.

கிரிக்கெட் ராஜாக்களின் இந்த சாதனையை நாங்கள் பாராட்டுகிறோம். இந்தியா கேட் பகுதியில் நடந்த கொண்டாட்டத்தில்நானே கலந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன். ஆனால் அப்பகுதியில் நிலவிய போக்குவரத்து நெரிசலைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி நான் போக வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டேன்.

இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உறவுகள் மேம்பட இந்த கிரிக்கெட் உறவுகள் பயன்படலாம் என்று நம்புகிறேன். பிரகாசமான தொடக்கத்தை என்னால் காண முடிகிறது.

உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை மிகச் சிறப்பாக நடத்த இந்திய பாதுகாப்புப் படையினரும் பெரும் பங்காற்றியுள்ளனர். அதையும் நான் பாராட்டுகிறேன் என்றார் ரோமர்.

இந்தியாவுடன் முன்பை விட அதிக அளவிலான நெருக்கத்தை தற்போது அமெரிக்கா கடைப்பிடிக்கிறது. ஒபாமாவின் நிர்வாகத்தில் இந்திய அமெரிக்கர்கள் நிறையப் பேர் இடம் பிடித்துள்ளனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒபாமா வாழ்த்து தெரிவித்திருப்பது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

எனவே இந்தியா மற்றும் இந்தியர்களுடன் மேலும் நெருக்கத்தை வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் டோணி தலைமையிலான இந்திய அணியினரை வாஷிங்டனுக்கு நேரில் அழைத்து ஒபாமா விருந்தளித்துக் கெளரவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Tuesday, April 5, 2011, 8:59 [IST]
Other articles published on Apr 5, 2011

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற