மும்பை: போர்ப்ஸ் பத்திரிகை நடத்திய கருத்துக் கணிப்பின்படி, 30 வயதுக்குட்பட்ட 30 இந்திய சாதனையாளர்களில் கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா, கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர், மகளிர் ஹாக்கி அணி கோல்கீப்பர் சவிதா புனிதா, துப்பாக்கிச் சுடும் வீராங்கனை ஹீனா சிந்து ஆகிய நான்கு விளையாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
உலகப் புகழ்பெற்ற போர்ப்ஸ் பத்திரிகை, 30 வயதுக்குட்பட்ட சாதனையாளர்களை கருத்துக் கணிப்பு நடத்தி தேர்வு செய்துள்ளது. அதன்படி, இந்தியாவில் 30 சாதனையாளர்களில் நான்கு பேர் விளையாட்டு வீரர்கள்.
அவர்களுடைய சாதனைகளின் தாக்கம், எவ்வளவு ஏற்றம் வந்தாலும் தானாக இருப்பது, தங்களுடைய துறையில் வளர்ச்சியை நோக்கி பயணிப்பது, குழுவின் ஒரு பிரதிநிதியாக செயல்படுவது என்று பல்வேறு காரணிகளின் அடிப்படையில், இந்த சாதனையாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் ஜொலித்த பும்ரா, சர்வதேசப் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். 2017ம் ஆண்டில் ஒருதினப் போட்டியில் அதிக விக்கெட் எடுத்தவர்களில் 23 போட்டிகளில் 39 விக்கெட் வீழ்த்தி மூன்றாவது இடத்தைப் பிடித்தார். ஐசிசியின் 2017ம் ஆண்டுக்கான அணியில் பும்ராவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. டி-20 போட்டிகளில் மனுஷன் அசத்தி வருகிறார். 32 போட்டிகளில், 40 விக்கெட்களை வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்திய இரண்டாவது பவுலராக உள்ளார்.
ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக் டி-20 போட்டியில் விளையாடிய முதல் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஒரே வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர். உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில், 115 பந்துகளில் 171 ரன்கள் குவித்தார்.
துப்பாக்கி சுடும் வீராங்கனையான ஹீனா சிந்துவுக்கு 2017ம் ஆண்டு சுட்டதெல்லாம் விளங்கியது. காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் 10 மீட்டர் ஏர் பில்டல் பிரிவில் தங்கம் வென்றார்.
இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கோல் கீப்பர் சவிதா புனியா, கடந்தாண்டு ஆசியக் கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றிருந்தார். மகளிர் ஹாக்கி அணியின் பல வெற்றிகளுக்கு பின்புலமாக இருந்தார்.