இந்திய அணிக்கு 4வது முறையாக உலகக் கோப்பை… டிராவிட் பாய்ஸ் டரியல்!

Posted By: SRIVIDHYA GOVINDARAJAN

டெல்லி: மான் கராத்தே படத்தில் வருவது போல, பின்னாளில் வரும் பத்திரிகை செய்தி முன்கூட்டியே தெரிந்தால் எப்படி இருக்கும். சரி நாளை மறுநாள் காலையில் அனைத்து பத்திரிகைகளிலும் வரக் கூடிய செய்தி இதுதான் - இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி 4வது முறையாக உலகக் கோப்பையை வென்றது’

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை பைனலில் மூன்று சாம்பியன்களான இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் நாளை மோத உள்ளன, ராகுல் டிராவிட் பயிற்சி அளிக்கும் இந்திய அணியே நான்காவது முறையாக பட்டம் வென்று சாதனை படைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

High expectations on Indian team

இந்த உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாத அணியாக, மிகவும் வலுவான பேட்டிங், பவுலிங் உள்ள அணியாக இந்திய அணி விளங்குகிறது.

இந்த உலகக் கோப்பைக்கான முதல் சுற்று லீக் ஆட்டங்களில் பி பிரிவில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இடம் பெற்றிருந்தன. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதன் பிறகு, பப்புவா நியூ குய்னா, ஜிம்பாப்வே அணிகளை, தலா 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

காலிறுதியில் வங்கதேசத்தை 131 ரன்கள் வித்தியாசத்திலும், அரை இறுதியில் பாகிஸ்தானை 203 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது.

ஆஸ்திரேலியா லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை 7 விக்கெட் வித்தியாசத்திலும் பப்புவா நியூ குய்னா அணியை 311 ரன்கள் வித்தியாசத்திலும் வென்றது. காலிறுதியில் இங்கிலாந்தை 31 ரன்கள் வித்தியாசத்திலும், அரை இறுதியில் ஆப்கானிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது.

லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால், இந்திய அணி தெம்பாக உள்ளது. இதுவரை 11 முறை நடந்துள்ள உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, 2000, 2008, 2012ல் கோப்பையை வென்றுள்ளது.

ஆஸ்திரேலியா 1988, 2002, 2010ல் கோப்பையை வென்றுள்ளது. பைனலில் இரு அணிகளும் 2012ல் ஒரே முறை சந்தித்துள்ளது. அப்போது இந்தியா வென்றுள்ளது.

ராகுல் டிராவில் பயிற்சி அளிக்கும் இந்திய அணியில், கேப்டன் பிருத்வி ஷா, ஷப்னம் கில், மன்ஜோத் கால்ரா என அதிரடி வீரர்களும், கமலேஷ் நாகர்கோட்டி, இஷான் போரல், ஷிவம் மவி என மிரட்டும் பந்துவீச்சாளர்கள் என, ஒவ்வொருவரும் தங்களுடைய பங்கை இதுவரை சிறப்பாக செய்து வந்துள்ளனர்.

இந்திய அணி, 4வது முறையாக உலகக் கோப்பை வெல்லும் என்பது கிரிக்கெட் பண்டிதர்களின் கணிப்பு.

Story first published: Friday, February 2, 2018, 11:39 [IST]
Other articles published on Feb 2, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற