4வது முறையாக ஜூனியர் கிரிக்கெட் உலக கோப்பையை வென்ற ஒரே அணி இந்தியா!

Posted By:

வெலிங்டன்: நியூசிலாந்தில் நடைபெற்ற ஜூனியர் உலக கோப்பை தொடரில் அசைக்க முடியாத அணியாக வலம் வந்து சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளது இந்தியா.

நடப்பு தொடரில் லீக் ஆட்டம் முதல் பைனல் வரை எந்த ஒரு போட்டியிலும் இந்தியா தோற்கவில்லை. மேலும், அனாயாசமாக வெற்றிகளை குவித்தது. ஆஸ்திரேலியா, வங்கதேசம், ஜிம்பாப்வே, பாகிஸ்தான் மீண்டும் ஆஸ்திரேலியா என பல அணிகளையும் எளிதாக பந்தாடி வெற்றியை வசப்படுத்தியது இந்தியா.

உலக கோப்பை ஆட்டத்தின் மிக முக்கியமான அரை இறுதியில் 203 ரன்கள் வித்தியாசத்தில் அனாயாசமாக பாகிஸ்தானை ஊதி தள்ளிய இந்திய அணி, இறுதி போட்டியிலும் பதற்றமே இன்றி ஆடி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை எளிதாக வீழ்த்தியது.

எல்லா புகழும் ஒருவருக்கே

எல்லா புகழும் ஒருவருக்கே

இந்திய இளம் அணி பதற்றமேயின்றி, நேர்த்தியாக ஆடுவதன் பின்னணியில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்ளார் என அனைத்து பிரபலங்களும் வாழ்த்துக்களை ஒரு சேர கூறி வருகிறார்கள். ஜூனியர் அணி வீரர்களும் கூட அதையேதான் வழி மொழிகிறார்கள். எதிர்கால இந்திய அணி பாதுகாப்பான கரங்களில்தான் உள்ளது என நெட்டிசன்களும் டிராவிட்டை புகழ்ந்து வருகிறார்கள்.

புதிய சாதனை

புதிய சாதனை

4 முறை உலக கோப்பையை வென்ற ஒரே ஜூனியர் அணி இந்திய அணிதான் என்ற பெருமையை இந்த வெற்றி ஈட்டிக் கொடுத்துள்ளது. 2000, 2008, 2012 மற்றும் 2018 ஆகிய வருடங்களில் இந்திய அணி ஜூனியர் உலக கோப்பையை வென்றுள்ளது. மற்ற தொடர்களிலும் தனது முத்திரையை பதிக்க தவறவில்லை. இந்திய அணிக்கு பிறகு ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 3 முறையும், பாகிஸ்தான் இரு முறையும், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் தலா 1 முறையும் கோப்பையை வென்றுள்ளன.

அடுத்த கோஹ்லி தயார்

இந்திய அணியின் கேப்டனாக இந்த தொடரில் வெற்றிகரமாக செயல்பட்டவர் பிரிதிவி ஷா. தொடர் நாயகன் விருதை பெற்றுள்ளவர் இந்தியாவின் அடுத்த கோஹ்லி என புகழப்படும் சுப்மேன் கில். இந்த தொடரில் 3 அரை சதங்கள், ஒரு சதம் விளாசிய அவர், பைனலில் 31 ரன்கள் எடுத்து அணிக்கு உதவினார். இத் தொடரில் அவர் மொத்தம் விளாசியது 372 ரன்களாகும்.

கலக்கல் நாயகர்கள்

2000 உலக கோப்பையில் யுவராஜ்சிங், 2004ல் தவான், 2006ல் புஜாரா ஆகியோர் முன்னதாக இந்தியா சார்பில் ஜூனியர் உலக கோப்பையில் தொடர் நாயகன் பட்டம் வென்றவர்கள். இவர்கள் அனைவருமே இந்திய அணியிலும் சாதனை முத்திரை படைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, February 3, 2018, 14:44 [IST]
Other articles published on Feb 3, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற