மெல்போர்ன் : கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தேர்வுக் குழுவில் ஏற்பட்ட மாற்றத்திற்கு பின், அதிகாரம் மிக்கவராக ஜஸ்டின் லாங்கர் முன்னேறியுள்ளார். தற்போது அணியின் பயிற்சியாளராகவும் இவரே இருக்கும் நிலையில், இவரது அதிகாரம் பெருகி வருவது, பலரது புருவத்தை உயர்த்தி உள்ளது.
ஆஸ்திரேலியாவின் தேர்வுக் குழு உறுப்பினர்களாக, மார்க் வாக், ட்ரெவர் ஹான்ஸ் மற்றும் கிரேக் சாப்பல் இருந்து வந்தனர். இதில் டி20 அணியை தேர்வு செய்யும் பொறுப்பில் இருந்த மார்க் வாக், கடந்த மே மாதம் பதவி விலகினார். அவரது இடம் காலியாக இருந்த நிலையில், தற்போது அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் அந்த இடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, இனி ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் வேலையோடு, டி20 அணியை தேர்வு செய்யும் பொறுப்பும் இவரை சாரும். இதற்கு முன்பு, மார்க் வாக் மற்றும் முன்னாள் பயிற்சியாளர் டேரன் லேமன் இணைந்து டி20 அணியை தேர்வு செய்து வந்தனர். அது சிறப்பான விளைவுகளை கொடுத்ததால், தற்போது சிறிய மாற்றத்தோடு பயிற்சியாளரே டி20 அணியையும் தேர்வு செய்ய உள்ளார்.
ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியை தேர்வு செய்யும் பொறுப்பு ட்ரெவர் ஹான்ஸ் தலைமையிலேயே தொடர்கிறது. அவருக்கு ஆலோசகர்களாக கிரேக் சாப்பல் மற்றும் ஜஸ்டின் லாங்கர் இருப்பார்கள்.
இது குறித்து பேசிய கிரிக்கெட் ஆஸ்திரேலியா அதிகாரி பேட் ஹாவர்ட், “ஜஸ்டின் இதே போன்ற வேலையே பெர்த் ச்கார்ச்சர்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருக்கும் போதும் செய்துள்ளார். பிக் பாஷ் லீக் மற்றும் அதன் வீரர்கள் பற்றி அதிக அறிவு உடையவர்” என தெரிவித்தார்.
அடுத்து வரும் ஐசிசி வேர்ல்ட் டி20 2020 உலகக்கோப்பை தொடரை குறி வைத்தே ஜஸ்டின் லாங்கர் நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிகிறது. ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஓராண்டு தடை விதிக்கபட்ட விவகாரத்திற்கு பின், அணியின் பயிற்சியாளர் டேரன் லேமன் பதவி விலகினார். அப்போது ஜஸ்டின் லாங்கர் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார்.
தற்போது ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற முடியாமலும், சரியான தலைமை இல்லாமல் தடுமாறி வருகிறது. ஜஸ்டின் லாங்கர் தான் அணியில் பல முடிவுகளையும் எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.