
மோசமான ஃபில்டிங்
கேட்ச்கள் தான் போட்டியை வென்று தரும் என்று கிரிக்கெட்டில் மிக பிரபலமான வார்த்தை உண்டு. ஆங்கிலத்தில் Catches win matches என்று சொல்வார்கள். ஆனால் நம் அண்டை நாட்டுக்காரர்கள், கேட்ச்களை தவற விட்டு, பல முக்கிய போட்டிகளை கோட்டை விட்டு இருக்கிறார்கள்.

தவறிய வாய்ப்புகள்
இதற்கான பட்டியல் மிகவும் நீளம். அண்மையில் 2021 டி20 உலகக் கோப்பையில் அரையிறுதியில் பாகிஸ்தான் ஒரு அழகான கேட்சை கோட்டை விட்டு, போட்டியையும் தோற்று, இறுதிப் போட்டி வாய்ப்பை வீணடித்தது, இதே போன்று 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முக்கிய ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் கேட்சை தவறவிட்டார்.

முக்கிய விக்கெட்
இதனால் விரக்தி அடைந்து மைதானத்தில் நின்ற பாகிஸ்தான் ரசிகரின் ஒரு போட்டோ, மிகப் பெரிய Meme ஆக மாறியது. இந்த நிலையில், ஆசிய கோப்பை இறுதி ஆட்டத்திலும் அப்படி ஒரு காமெடி நடந்தது. இறுதி ஆட்டத்தில் இலங்கை வீரர் ராஜபக்சா தனி ஆளாக நின்று போராடி கொண்டிருந்தார்.

கேட்சை தவறவிட்டு சொதப்பல்
ராஜபக்சாவின் விக்கெட்டை எடுத்தால், பாகிஸ்தானுக்கு அது சாதகமாக இருந்திருக்கும். 18.6 வது ஓவரில், ஹஸ்னாயின் வீசிய பந்தை ராஜபக்சா தூக்கி அடித்தார். அப்போது சிக்சர் லைனில் நின்ற ஆசிஃப் அலி, அதனை பிடித்தார். அப்போது சம்பந்தமே இல்லாமல் ஓடி வந்த ஷதாப் கான், கேட்ச் பிடிக்கிறேன் என்று ஆசிஃப் அலியை மோதினார். இதனால், அவர் பிடித்திருந்த பந்து சிக்சருக்கு சென்றது. இந்த காட்சியை பார்த்ததும் பாகிஸ்தான் ரசிகர்கள் கடுப்பாக, மற்றவர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர்.