
அதிரடி பார்ட்னர்ஷிப்
முதல் ஓவரில் இருந்தே அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா 85 பந்துகளில் 101 ரன்களை விளாசினார். மற்றொரு ஓப்பனரான சுப்மன் கில் 78 பந்துகளில் 112 ரன்களை குவித்தார். இந்த தொடரின் முதல் போட்டியில் இரட்டை சதம் அடித்திருந்த கில், இந்த போட்டியில் சதம் அடித்து மீண்டும் தனது இடத்தை நிரூபித்து விட்டார்.

சுவாரஸ்ய சம்பவம்
இந்நிலையில் இப்போட்டியில் லாக்கி ஃபெர்கியூசன் வீசிய ஓவரில் கில் ரன் வேட்டை நடத்திய விதம் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. ஆட்டத்தின் 8வது ஓவரை ஃபெர்கியூசன் வீசினார். பெரும்பாலான பந்துகள் அதிவேகமாக தான் வந்தது. ஆனால் அவரின் ஓவரில் 4,4,4,6, 4 என மொத்தமாக 22 ரன்களை கில் விளாசினார்.

வியந்த ரோகித்
நியூசிலாந்தில் இருக்கும் அதிவேக பவுலர் ஃபெர்கியூசன் தான். அவரின் பந்துகளை எந்தவித பதற்றமும் இல்லாமல் கில் அசால்ட்டாக அடித்ததை பார்த்த ரோகித் சர்மா வாயை பிளந்துக்கொண்டு பார்த்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக உடலுக்குள் ஷார்ட்டாக வந்த பந்தை அப்பர் கட் அடித்தது மிகவும் ஸ்டைலாக இருந்தது.

உலக சாதனை படைப்பு
இதுஒருபுறம் இருக்க, இந்த இன்னிங்ஸ் மூலம் உலக சாதனை படைத்தார். இரு தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அதிக ரன்களை அடித்தவர் பட்டியலில் பாபர் அசாமை சமன் செய்தார். பாபர் அசாம் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக கடந்த 2016ம் ஆண்டு 360 ரன்களை அடித்தார். தற்போது கில் நியூசிக்கு எதிராக 360 ரன்களை விளாசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











