
எச்சிலை பயன்படுத்த தடை
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச அளவில் அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் கடந்த இரண்டரை மாதங்களாக முடங்கியுள்ள நிலையில், அதை மீண்டும் துவங்க முடிவெடுத்த ஐசிசி அதற்கென பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. பந்தை ஷைன் செய்ய காலங்காலமாக எச்சில் பயன்படுத்தப்பட்டு வந்த நடைமுறைக்கு முதலில் 'நோ' சொல்லியுள்ளது ஐசிசி.

வீரர்கள் கண்டனம்
ஐசிசியின் இந்த உத்தரவிற்கு சர்வதேச அளவில் பல்வேறு வீரர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன்மூலம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக போட்டிகள் திரும்பிவிடும் என்று தெரிவித்துள்ள அவர்கள், எச்சிலுக்கு மாற்றாக பல்வேறு வழிமுறைகளையும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பிற்கு பிறகு வரும் 8ம் தேதி நடக்கவுள்ள இங்கிலாந்து -மேற்கிந்திய தொடரில் இந்த தடை எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்று பார்க்கவுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஐசிசிக்கு கோரிக்கை
இந்நிலையில் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சாளர் கெமர் ரோச், பந்தை ஷைன் செய்ய மெழுகை பயன்படுத்த அனுமதிக்குமாறு ஐசிசிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். பந்தை ஷைன் செய்ய எச்சிலை பயன்படுத்தியே தான் வளர்ந்ததாகவும், தற்போது அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மெழுகை பயன்படுத்த அனுமதிப்பதன்மூலம் பௌலர்களுக்கும் சம வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தவிர்க்கலாம்
மேலும் 50 ஓவர்களுக்கு ஒரு புதிய பந்தை மாற்றும் யோசனைக்கும் கெமர் ரோச் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதன்மூலம் பேட்ஸ்மேன்களுகு சாதகமாக போட்டிகள் மாறுவதை தவிர்க்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இதே கருத்தையும் நேரலை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆஸ்திரேலிய பௌலர் பிரெட் லீ மற்றும் முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரும் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











