என்னங்க சார் உங்க திட்டம்?

Posted By: Staff

புதுடில்லி: முள்ளை முள்ளால் எடுக்க முடியும். ஆனால், மோசமான ஒரு முடிவை, மற்றொரு மோசமான முடிவால் சரி செய்ய முடியுமா? அதுதான் இந்திய ஹாக்கி நிர்வாகத்தில் நடந்து வருகிறது.

தலைப்பை படித்தவுடன், ஜோக்கர் படத்தில் வரும் பாடல் உங்களுக்கு ஞாபகம் வரலாம். ஒரு ஜோக்கர் போலதான், இந்திய ஹாக்கி நிர்வாகமும் நடந்து கொள்கிறது.

Hockey India in poor shape

ஹாக்கி அணியின் பயிற்சியாளர்களையும் ஜோக்கர்களாக்கி, மக்களை முட்டாளாக்கி, வீரர்களை குழப்பி, ஒட்டுமொத்தமாக, தேசிய விளையாட்டான ஹாக்கிக்கு மிகப் பெரிய குழியை தோண்டுவதற்காக, ஒவ்வொருவரும் கையில் மண்வெட்டி, கடப்பாரை எடுத்துள்ளனர்.

கடந்த, 23 ஆண்டுகளால், 23 கோச்கள் என்ற அபார சாதனையைப் புரிந்துள்ளது இந்திய ஹாக்கி அணி. அதில், கடைசி நான்கு ஆண்டுகளில், நான்கு வெளிநாட்டு கோச்களை பார்த்துள்ளது.

ஹாக்கி அணியின் பயிற்சியாளராக இருந்த நெதர்லாந்தைச் சேர்ந்த ரோலண்ட் ஓல்ட்மான்ஸ், சமீபத்தில் நீக்கப்பட்டார். புதிய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டிருந்தன.

வரும், 15ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் இருந்த நிலையில், மகளிர் ஹாக்கி அணியின் கோச்சாக இருந்த ஜோயர்டு மரிஜ்னே, ஆண்கள் அணியின் கேப்டனாகவும், ஆண்கள் ஜூனியர் அணியின் கோச்சாக இருந்த ஹரீந்திர சிங், பெண்கள் அணியின் கோச்சாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதுவும், 2010 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வரை.

இந்த நியமனங்கள், இந்திய ஹாக்கி நிர்வாகத்தின் செயல்பாட்டை சந்தேகிக்கப்பட வைக்கிறது. முதலில் எதற்கு ஓல்ட்மான்ஸ் நீக்கப்பட்டார் என்பதே தெரியவில்லை. தற்போது இந்த நியமனங்கள், அவர்கள் ஹாக்கி விளையாட்டை கேலி கூத்தாக்கி கொண்டிருக்கிறார்களோ என்றே யோசிக்க வேண்டியுள்ளது.

புதிய பயிற்சியாளர் அணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட நிலையில், இந்த நியமனங்கள் செய்துள்ளது, ஒன்று யாருமே விண்ணப்பிக்காமல் இருந்திருக்க வேண்டும். அல்லது யார் வந்தால் என்ன, அவர்கள் கொஞ்சம் நாளைக்குத்தானே என்று நினைப்பில் ஹாக்கி நிர்வாகம் இருக்க வேண்டும்.

இந்தாண்டு நடக்கும் ஹாக்கி உலக லீக் இறுதிப் போட்டி மற்றும் 2018ல் நடக்கும் உலகக் கோப்பை போட்டிகளுக்கு இந்தியா ஏற்கனவே தகுதிபெற்றது. போட்டியை நடத்தும் நாடு என்ற வகையில், இந்தத் தகுதிப் பெற்றுள்ளது. இதைத் தவிர, 2010ல் ஒலிம்பிக் போட்டி நடக்க உள்ளது.

இந்த நேரத்தில், இதுவரை எந்த நாட்டு ஆண்கள் அணிக்கு பயிற்சி அளித்த அனுபவம் இல்லாத மரிஜ்னே கோச்சாக நியமிக்கப்பட்டுள்ளது ஏன் என்பது, அரசியல் குழப்பங்களில் இருந்து தமிழக மக்களுக்கு எப்போது விடிவுகாலம் ஏற்படும் என்பதைவிட கடினமான கேள்வி.

மரிஜ்னோவுக்கு இதில் எந்த இழப்பும் இல்லை. அவருக்கு, மாதத்துக்கு, 6 லட்சம் ரூபாய் சம்பளம், இதரப் படிகள் என கிடைக்கும். அதைத் தவிர, ஒரு தேசிய அணிக்கு கோச்சாக இருந்த பெருமையும் கிடைக்கும்.

ஒவ்வொரு கோச்சுக்கும், ஒருவித பாணி இருக்கும். அவருடைய தனி பாணியில் அணியைத் தயார் செய்வார். ஆண்டுக்கு ஒருமுறை கோச் மாற்றப்படுவதால், அணியின் வீரர்கள் சோர்ந்து போய்விடுவர். ஒரு கோச் சொல்லியபடி செயல்பட முடியாதவர்கள் கூட, இந்த ஆள் இன்னும் எவ்வளவு நாளுக்கு இருக்கப் போகிறார். என்ற மனப்பாங்குடனே இருப்பர்.

சாம்பாருக்கு மணம், சுவை சேர்க்கும் கறிவேப்பிலையாக இல்லாமல், மசாலாவாக , கோச் இருந்தால்தான், இந்த ஹாக்கி அணி பிழைக்க முடியும்.

Story first published: Sunday, September 10, 2017, 18:12 [IST]
Other articles published on Sep 10, 2017

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற