விஷிக்கு மற்றொரு பட்டம்

Posted By: SRIVIDHYA GOVINDARAJAN

மாஸ்கோ: விரைவு செஸ் போட்டிகளில் தன்னை அடித்துக் கொள்வதற்கு ஆளில்லை என்ற அளவுக்கு, ரஷ்யாவில் நடந்த டால் நினைவு ராபிட் செஸ் போட்டியில் பட்டம் வென்றார் விஸ்வநாதன் ஆனந்த்.

கடந்தாண்டு டிசம்பர் மற்றும் இந்தாண்டு ஜனவரியில் நடந்த உலக விரைவு செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த உலக பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார், விஸ்வநாதன் ஆனந்த்.

Anand dominates

கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டார் என்று கூறப்பட்ட நிலையில், 48 வயதாகும் ஆனந்த், விரைவு செஸ் போட்டியில் உலகச் சாம்பியனானார். அதற்கு பிறகு பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்று, வயசானாலும் சிங்கம் சிங்கம்தான் என்பதை காட்டினார்.

அதைத் தொடர்ந்து ரஷ்யாவில் நடந்த டால் நினைவு ராபிட் செஸ் போட்டியில், 6 புள்ளிகள் பெற்று பட்டத்தை வென்றார். காலா படத்தில் ரஜினி கூறுவதுபோல, வேங்கையன் மகன் ஒத்தைய நிக்க, தில்லிருந்த மொத்தமா வாங்கலே என்று கர்ஜித்து வென்றார் ஆனந்த்.

நான்கு ஆட்டங்களில் வெற்றி, நான்கில் டிரா செய்து, வாய்ப்புள்ள 9 புள்ளிகளில், 6 புள்ளிகளைப் பெற்றார். மூன்றாவது சுற்றில் அஜர்பெய்ஜானின் ஷக்ரியார் மாமேத்யாரோவிடம் மட்டும் தோல்வியடைந்தார். கடைசி சுற்றில், இஸ்ரேலின் போரிஸ் ஜெல்பான்டுடன் டிரா செய்து, பட்டத்தை வென்றார் ஆனந்த்.

முன்னதாக நடந்த சுற்றுகளில், ரஷியாவின் இயான் நெபோம்நியாட்சி, அலெக்சாண்டர் கிர்சுக், டேனில் டுபோவையும், அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவையும் வென்றார்.

Story first published: Tuesday, March 6, 2018, 11:50 [IST]
Other articles published on Mar 6, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற