நார்போக்: “ரெடி, ஸ்டெடி, கோ” என்று தான் எந்த ஒரு ரேஸும் தொடங்குவார்கள். ஆனால், இந்த நத்தை ரேஸ் “ரெடி, ஸ்டெடி, ஸ்லோ” என்று தான் தொடங்குகிறார்கள். இங்கிலாந்தில் கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக, உலக நத்தை ரேஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகிறது.
இது ஏதோ ஒரு நகைச்சுவைக்காகவும், பொழுதுபோக்குக்காகவும் நடத்துவதாக நினைத்தால், நமக்கு ஆச்சரியம் அளிக்கிறார்கள், இதன் போட்டியாளர்களும், இந்த தொடரை நடத்துபவர்களும். இந்த உலக நத்தை ரேஸ் சாம்பியன்ஷிப்புக்கு என ஒரு பயிற்சியாளர் இருக்கிறார். அவர் நத்தைகளை வரிசைப்படுத்துவது, அவற்றுக்கு சறுக்கு பலகையில் பயிற்சி அளிப்பது, சரியான உணவுக் கட்டுப்பாடுகள் பின்பற்றுவதை உறுதி செய்வது என பிரமிக்க வைக்கிறார்.
நம் ஊரில் நடக்கும் சேவல் சண்டை, ஜல்லிக்கட்டு போல, இந்த நத்தை ரேஸிலும் ஊக்கமருந்து (அதாம்பா...சரக்கு) தடை செய்யப்பட்டுள்ளது. நத்தைகள் பரிசோதனைக்கு பின்னரே ரேஸில் பங்கு பெறுகின்றன.
இந்த ரேஸ் நடத்தப்படும் இடம், ஒரு பதிமூன்று இன்ச் கொண்ட வட்டப்பலகை. அதன் மத்தியில் அனைத்து நத்தைகளும் நிறுத்தப்படும். அங்கேயிருந்து, அந்த பதிமூன்று இன்ச் பலகையின் எல்லையை, அடையும் முதல் நத்தை வெற்றியாளராக அறிவிக்கப்படும்.
இந்த நத்தைப் போட்டிக்கெல்லாம் எத்தனை பேர் நத்தைக்கு பயிற்சி அளித்து கலந்து கொள்ள வைக்கப் போகிறார்கள்? என்று தானே நினைக்கிறீர்கள். இந்த வருடம் மட்டும் 190 நத்தைகள் கலந்து கொண்டுள்ளன. இந்த ஆண்டு வெயில் அதிகம் இருந்ததால், பல நத்தைகள் பாதியிலேயே சுருண்டு கொண்டன. அதனால், மிஞ்சிய 11 நத்தைகள் இறுதிப் போட்டியை எட்டியுள்ளன.
சென்ற முறை சாம்பியனான லேரி என்ற நத்தை, அந்த போட்டியில் இரண்டு நிமிடம், 47 நொடிகளில் எல்லையை தொட்டது. ஆனால், இந்த முறை அந்த நத்தையால் வெற்றியை எட்டமுடியவில்லை. இந்த முறை வென்றது ஹோஸ்டா என்ற நத்தை. மூன்று நிமிடங்கள் 10 நொடிகளில் எல்லையை தொட்டது, ஹோஸ்டா.
அதன் உரிமையாளர் ஜோ வாட்டர்பீல்ட் கூறுகையில், “நீ வெற்றி பெறவில்லை என்றால் உன்னை நசுக்கி விடுவேன் என்று இந்த நத்தையிடம் காலையில் கூறினேன்” என்றார். ஆஹா! இப்பவே கண்ண கட்டுதே!!