ஒரே நேரத்தில் இரண்டு ஆசியக் கோப்பை – ஹாக்கியில் இந்தியா அசத்தல்

Posted By: Staff

டெல்லி: ஹாக்கியில் ஒரே ஆண்டில் இரண்டு ஆசியக் கோப்பைகளை வென்று இந்திய அணி அசத்தியுள்ளது. சமீபத்தில் வங்கதேசத்தில் நடந்த ஆடவர் பிரிவிலும், ஜப்பானில் நடந்த மகளிர் பிரிவிலும் கோப்பையை வென்று இந்தியா சாதனைப் படைத்துள்ளது.

ஜப்பானில் நடந்த மகளிர் ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியின் பைனலில் 5-4 என்ற கணக்கில் சீனாவை வென்று இந்திய அணி கோப்பையை வென்றது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு மகளிர் பிரிவில் இந்தியாவுக்கு கோப்பை கிடைத்துள்ளது.

இதன் மூலம், இந்திய மகளி்ர் அணி அடுத்த ஆண்டு நடக்கும் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதிப் பெற்றது. ஆசியக் கோப்பையின் முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா சிங்கப்பூரை 10-0 என்ற கோல் கணக்கில் வென்றபோதே, அடுத்த உலகக் கோப்பைக்கு தகுதிப் பெற்றது.

கங்கணம் கட்டி ஆடிய வீராங்கனைகள்

கங்கணம் கட்டி ஆடிய வீராங்கனைகள்

ஆப்பிரிக்க கோப்பைக்கான போட்டியில் கானா அணியை தென்னாப்பிரிக்கா வென்றது. தென்னாப்பிரிக்கா ஏற்கனவே உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றதால், இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. இருந்தாலும், ஆசியக் கோப்பையை வென்று, நேரடியாக தகுதிபெறுவோம் என்று நமது வீராங்கனைகள் கங்கணம் கட்டிக் கொண்டு, ஆசியக் கோப்பையை வென்று உலகக் கோப்பைக்கு தகுதிப் பெற்றது.

இரண்டாவது ஆசியக் கோப்பை

இரண்டாவது ஆசியக் கோப்பை

இந்த ஆசியக் கோப்பைப் போட்டியில் தான் விளையாடிய ஒரு போட்டியில் கூட தோல்வியடையவில்லை என்ற பெருமையையும் மகளிர் அணி பெற்றுள்ளது. இதன் மூலம் இரண்டாவது முறையாக மகளிர் அணிக்கு ஆசியக் கோப்பை கிடைத்துள்ளது. இதுவரை நடந்துள்ள 9 ஆசியக் கோப்பை போட்டிகளில் இந்திய மகளிர் அணி, 2004, 2017 என இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இரண்டு முறை இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. தலா இரண்டு முறை மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தைப் பிடித்தது.

10 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பை

10 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பை

முன்னதாக வங்கதேசத்தில் சமீபத்தில் நடந்த ஆசியக் கோப்பை போட்டியில் இந்திய ஆடவர் அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. ஆடவர் பிரிவில் இதுவரை நடந்துள்ள 10 ஆசியக் கோப்பைப் போட்டிகளில் இந்தியா 2003, 2007, 2017 என மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 5 முறை இரண்டாவது இடத்தையும், ஒருமுறை மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

இரண்டாவது முறையாக இரண்டு கோப்பை

இரண்டாவது முறையாக இரண்டு கோப்பை

இந்தாண்டில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் கோப்பையை வென்று இந்திய அணிகள் இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளன. 2003ல் ஆடவர் பிரிவிலும், 2004ல் நடந்த மகளிர் பிரிவிலும் ஆசியக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது.

அசத்தும் இந்திய ஹாக்கி அணிகள்

அசத்தும் இந்திய ஹாக்கி அணிகள்

ஒரே நேரத்தில் ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகள் உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதிப் பெற்றுள்ளன. ஆடவர் பிரிவில உலகக் கோப்பை போட்டிகள் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்க உள்ளது. இந்தியா 1975ல் சாம்பியன் பட்டத்தை வென்றது. மகளிர் உலகக் கோப்பை போட்டி இங்கிலாந்தின் லண்டன் நகரில் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது.

ஒரே நேரத்தில் ஆசியக் கோப்பையை வென்றுத் தந்த இந்திய ஹாக்கி அணிகள், உலகக் கோப்பைகளையும வென்றுத் தரும் என்று எதிர்பார்ப்போம்.

Story first published: Monday, November 6, 2017, 16:16 [IST]
Other articles published on Nov 6, 2017
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற