காமன்வெல்த்: இந்தியாவிற்கு இரண்டாவது தங்கம்.. பளு தூக்கும் போட்டியில் சஞ்சிதா சானு சாதித்தார்!

Posted By:

கோல்ட் கோஸ்ட்: காமன்வெல்த் போட்டியின் இரண்டாவது நாளில், இந்தியாவிற்கு இரண்டாவது தங்கத்தை, மகளிர் பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனை சஞ்சிதா சானு வென்றார்.

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில், 21வது காமன்வெல்த் போட்டிகள் நடக்கின்றன. முதல் நாளான நேற்று மகளிர் பளுதூக்குதலில் 48 கிலோ எடைப்பிரிவில் மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்றார். ஆடவர் 56 கிலோ எடைப் பிரிவில் குருராஜா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

 Record-breaking Sanjita Chanu bags second gold for India

இன்று நடந்த மகளிர் 53 கிலோ எடைப் பிரிவில், மணிப்பூரின் சஞ்சிதா சானு புதிய சாதனையுடன் தங்கம் வென்று அசத்தினார். இதன் மூலம், இந்தியா இதுவரை 2 தங்கம், 1 வெள்ளி வென்றுள்ளது.

24 வயதாகும் சஞ்சிதா, ஸ்னாட்ச் பிரிவில் 84 கிலோ எடையைத் தூக்கினார். இதன் மூலம் புதிய காமன்வெல்த் போட்டி சாதனையைப் புரிந்துள்ளார். பின்னர் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 108 கிலோ எடையைத் தூக்கினார். ஒட்டுமொத்தமாக, 192 கிலோ தூக்கி தங்கம் வென்றார்.

நடப்பு சாம்பியனான பப்புவா நியூ குய்னாவைச் சேர்ந்த லோவா டிகா, ஸ்னாட்ச் பிரிவில் 80 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 102 கிலோ என மொத்தமாக 182 கிலோ தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார். கனடாவைச் சேர்ந்த ராச்செல் லெப்லாங் பாசிநெட் 181 கிலோவுடன் வெண்கலம் வென்றார். கிளாஸ்கோவில் 2014ல் நடந்த காமன்வெல்த் போட்டியில், 48 கிலோ எடைப் பிரிவில் சஞ்சிதா சானு தங்கம் வென்றார். இந்த முறை 53 கிலோ எடைப் பிரிவுக்கு மாறினார். இந்த காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வெல்லக் கூடியவர்களில் ஒருவராக கணிக்கப்பட்ட சஞ்சிதா, தங்கம் வென்று அதை நிரூபித்துள்ளார்.

ஸ்னாட்ச் பிரிவின் முதல் வாய்ப்பில் 81 கிலோ தூக்கிய சஞ்சிதா, இரண்டாவது வாய்ப்பில் 83 கிலோ தூக்கி, காமன்வெல்த் போட்டி சாதனையை சமன் செய்தார். மூன்றாவது வாய்ப்பில் 84 கிலோ தூக்கி புதிய சாதனையை புரிந்தார். இதற்கு முந்தைய சாதனையை கிளாஸ்கோ போட்டியின்போது, இந்தியாவின் ஸ்வார்த்தி சிங் புரிந்திருந்தார்

கிளீன் அண்ட் ஜெர்க் பிரி்வில் 104 மற்றும் 108 கிலோ எடையை தூக்கிய சஞ்சிதா மூன்றாவது வாய்ப்பில் தடுமாறினார். அதையடுத்து, 113 கிலோ தூக்கினால்தங்கம் என்ற நிலையில் லோவா டிகா வாய்ப்பை இழந்தார். அதையடுத்து சஞ்சிதாவுக்கு தங்கம் கிடைத்தது.

English summary
Sanjita Chanu delivered India their second gold medal of the Commonwealth Games 2018 in Gold Coast in the women's 53kg weightlifting event.
Story first published: Friday, April 6, 2018, 10:43 [IST]
Other articles published on Apr 6, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற