ஒலிம்பிக் பதக்கம் வெல்ல துடிக்கிறார் இந்திய பளு தூக்கு வீராங்கனை சோனியா சானு

Posted By:
Soniya Chanu
டெல்லி: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதற்காக கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக இந்திய பளு தூக்கு வீராங்கனை சோனியா சானு தெரிவித்துள்ளார்.

லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் இந்தியாவில் இருந்து 80க்கும் மேற்பட்ட வீரர்களும், வீராங்கனைகளும் கலந்து கொள்ள உள்ளனர். வில்வித்தை, டென்னில், ஹாக்கி, நீச்சல், பளு தூக்குதல் குத்து சண்டை, பாட்மிண்டன் உட்பட மொத்தம் 13 போட்டிகளில் இந்தியர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த நிலையில் பளு தூக்கும் போட்டியில் கலந்து கொள்ள உள்ள இந்திய வீராங்கனை சோனியா சானு, ஒலிம்பிக்கில் பதக்கம் பெறுவதற்காக கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் பதக்கம் வெல்வேன் என்று இப்போது உறுதி அளிக்க நான் விரும்பவில்லை. ஆனால் ஒலிம்பிக் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நான் பதக்கம் பெற முழு வாய்ப்பு உள்ளது

ஒலிம்பிக் போட்டியில் வெற்றிப் பெற தேவைகளை எனது மனத்தில் நிறுத்தி கொண்டு அதற்காக சிறப்பாக தயாராகி வருகிறேன். ஒரு போட்டியின் முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்பதால், நான் பதக்கம் வெல்வேன் என்று 100 சதவீதம் உறுதி அளிக்க முடியாது.

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 175 கிலோ தூக்கி, 4வது இடத்தை பிடித்தேன். அதேபோல உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 171 கிலோ பளுவை தூக்கி 6வது இடத்தை பிடித்தேன். ஒலிம்பிக் போட்டியில் 178 கிலோ பளுவை தூக்கிவி்ட்டால், எனக்கு பதக்கம் கிடைக்கும் என்று நம்புகிறேன். தொடர் பயிற்சியின் தற்போது எனது திறமை அதிகரித்து உள்ளது.

பாட்டியாலாவில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் எனக்கு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான அனைத்து வசதிகளும் கிடைக்கிறது. இதனால் எனது உடல்திறன் அதிகரித்துள்ளது. மற்ற விளையாட்டு வீரர்களை போல பளு தூக்கும் வீரர்களுக்கு அதிகளவிலான பயிற்சி தேவையில்லை. எனவே வழக்கமான பயிற்சிகளில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.

இந்த மாதம் 28ம் தேதி லண்டன் ஒலிம்பிக்கில் பளு தூக்கும் போட்டி நடைபெற உள்ள நிலையில், இந்திய பளு தூக்கும் அணி வரும் 16ம் தேதி லண்டன் புறப்பட்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, July 12, 2012, 8:15 [IST]
Other articles published on Jul 12, 2012

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற