நியூயார்க்: பிரபல WWE வீரரான தி மிஸ் (The Miz), சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், தான் அமேசான் நிறுவனரும், தலைமை நிர்வாகியுமான ஜெஃப் பீசோஸ் உடன் மோத விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
பொதுவாக ரெஸ்லிங் வீரர்கள், மற்ற பிரபலமான, பலமான ரெஸ்லிங் வீரர்கள், குத்துச்சண்டை அல்லது தற்காப்பு கலை வீரர்களோடு சண்டையிட விரும்புவார்கள். ஆனால், தி மிஸ் மட்டும் ஏன் உலகின் மிகப்பெரும் பணக்காரரோடு சண்டையிட விரும்புகிறார்? என்ற எதிர்பார்ப்பில் இந்த விஷயம் தற்போது வைரலாகி வருகிறது. ஆனால், அவர் ஏன் அப்படி சொன்னார்?, என்ற காரணத்தை கேட்டால் அடப்பாவமே! என்பது போல உள்ளது.
WWE ரெஸ்லிங் வீரரான தி மிஸ், அதே நிறுவனத்தை சேர்ந்த ரெஸ்லிங் வீராங்கனையான மரிஸ் (Maryse)-ஐ திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு சமீபத்தில் குழந்தையும் பிறந்தது. இதனால், சில காலம் ஓய்வில் இருந்த மிஸ், தற்போது மீண்டும் களத்தில் குதித்துள்ளார். அதோடு, அவரும், அவர் மனைவியும் சேர்ந்து ஒரு ரியாலிட்டி தொடரிலும் நடிக்கிறார்கள்.
அந்த தொடர் குறித்த பேட்டியின் போது தான் அமேசான் தலைவரோடு சண்டை போட வேண்டும் என தெரிவித்துள்ளார். இதற்கு அவர் சொன்ன அந்த “அடப்பாவமே” காரணம் இதுதான், “நான் பீசோஸ்-உடன் மோத விரும்புகிறேன். ஏனென்றால், என் மனைவி அமேசானில் இருந்து தினமும் பெட்டி பெட்டியாய் பொருட்களை வாங்கி குவிக்கிறார். என் வீட்டின் குப்பை தொட்டி கூரையை பிய்த்துக்கொண்டு நிரப்பப்பட்டுள்ளது. என் வீட்டில் மூன்று குப்பைத்தொட்டிகள் முழுவதும் அமேசான் பெட்டிகள் தான் நிரம்பியுள்ளது. ஏனெனில், இவருக்கு (மனைவிக்கு) அமேசான் ப்ரைம் மிகவும் பிடித்துள்ளது, அதனால், அமேசான் ப்ரைமில் உள்ள அனைத்து பொருட்களையும் வாங்குகிறார்” என கூறினார்.
இந்த ரெஸ்லிங் வீரருக்கு மட்டுமா இந்த பிரச்சனை? நாட்டில் பல பேருக்கு இதே பிரச்னைதான். முன்னாடி கடை வீதிக்கு போனால்தான் பர்ஸ் காலியாகும், இப்போ அப்படியா? நீங்களும் உங்க மனக்குறையை கொட்டுங்க மக்களே!