கை கொடுத்தார் சிந்து... தப்பியது இந்தியா!

By: SRIVIDHYA GOVINDARAJAN

டெல்லி: இக்கட்டான நேரத்தில் பிவி சிந்து கைகொடுக்க, ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி தோல்வியில் இருந்து தப்பியது.

ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் மலேசியாவின் அலோர் செட்டார் நகரில் நேற்று துவங்கியது. இதில் மகளிர் பிரிவில் மொத்தம் 13 அணிகள் பங்கேற்கின்றன. மூன்று பிரிவுகளில் தலா 3 அணிகளும் ஒரு பிரிவில் 4 அணிகளும் இடம்பெற்றுள்ளன. டபிள்யூ பிரிவில் இந்தியா, ஜப்பான், ஹாங்காங் அணிகள் இடம்பெற்றுள்ளன.

Sindhu starts in India’s victory

ஹாங்காங் அணிக்கு எதிராக நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியா 3–2 என்ற கணக்கில் வென்றது.

இந்தப் போட்டியின் அரை இறுதியில் விளையாடும் அணிகள், வரும் மே மாதம் பாங்காக்கில் நடக்கும் ஊபர் கோப்பை பைன்ல்ஸ் போட்டிக்கு தகுதி பெறும்.

காயம் காரணமாக சாய்னா நெஹ்வால் இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை. முதலில் நடந்த ஒற்றையர் பிரிவில் சிந்து 21–12, 21–18 என யிப் பூய் யின்னை வென்றார்.

அதைத் தொடர்ந்து நடந்த இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் அஸ்வினி பொன்னப்பா, பிரஜாக்தா சாவந்த் ஜோடி 22–20, 20–22, 10–21 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. பின்னர் ஒற்றையரில் களமிறங்கிய இளம் வீராங்கனை ஸ்ரீகிருஷ்ண பிரிய குதிரவாலி 19–21, 21–18, 20–22 என்ற கணக்கில் செங்க் யிங்க் மீயிடம் தோல்வியடைந்தார்.

மொத்தம் ஐந்து ஆட்டங்கள் கொண்ட இந்த போட்டியில் முதல் மூன்றில் 1–2 என இந்தியா பின்தங்கியிருந்தது. அப்போது சிக்கி ரெட்டியுடன் இரட்டையரில் இறங்கினார் சிந்து. 21–15, 15–21, 21–14 என வென்று சமநிலையை உருவாக்கினர்.

மூன்றாவது ஒற்றையரில் விளையாடிய ருத்விகா ஷிவானி காடே 16–21, 21–16, 21–13 என்ற செட்களில் யுங் சுன் யீயை வென்று அணிக்கு வெற்றியை உறுதி செய்தார். அடுத்ததாக நாளை நடக்கும் ஆட்டத்தில் ஜப்பானுடன் இந்திய மகளிர் அணி மோதுகிறது.

ஆடவர் பிரிவிலும் அசத்தல்

ஆடவர் பிரிவில் மொத்தம் 15 அணிகள் பங்கேற்கின்றன. இதில், மூன்று

பிரிவுகளில் தலா நான்கு அணிகளும், ஒரு பிரிவில் 3 அணிகளும் மோதுகின்றன. டி பிரிவில் இந்தியா , இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், மாலத்தீவுகள் அணிகள் இடம்பெற்றுள்ளன.

நேற்று இரவு நடந்த தனது முதல் லீக் ஆட்டத்தில் பிலிப்பைன்ஸ் அணியை 5–0 என்ற கணக்கில் இந்தியா அபாரமாக வென்றது. மூன்று ஒற்றையர் மற்றும் இரண்டு இரட்டையர் பிரிவு ஆட்டங்களில் நேர் செட்களில் இந்தியா வென்றது.

ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21–11, 21–12 என்ற கணக்கில், 28 நிமிடங்களில் வென்றார். சாய் பிரனீத் 21–6, 21–10 என்ற கணக்கில் 23 நிமிடங்களில் வென்றார். சமீர் வர்மா 21–15, 21–12 என்ற செட்களில், 27 நிமிடங்களில் வென்றார்.

இரட்டையரில் மனு ஆத்ரி, சுமீத் ரெட்டி ஜோடி 21–15, 21–13 என்ற செட்களில், 28 நிமிடங்களில் வென்றது. அடுத்ததாக அர்ஜூன், ராமசந்திரன் ஸ்லோக் ஜோடி 21–18, 21–17 என்ற கணக்கில், 29 நிமிடங்களில் வென்றது.

இன்று இரவு நடக்கும் ஆட்டத்தில் மாலத் தீவுகளையும், நாளை இந்தோனேஷியாவையும் இந்தியா அடுத்து சந்திக்க உள்ளது.

Story first published: Wednesday, February 7, 2018, 10:02 [IST]
Other articles published on Feb 7, 2018
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற