சென்னை: சென்னையில் நடக்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் எங்கு நடக்கும் என்பது தெரியாத நிலையில், சென்னையில் அடுத்து நடைபெறவிருந்த 6 போட்டிகளுக்கு டிக்கெட் வாங்கியவர்கள், அதற்காக செலுத்திய கட்டணத்தை திரும்பப் பெறுவதற்காக சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்துள்ளனர்.
இந்தியன் பிரீமியர் லீக் 11வது சீசன் போட்டிகள் நடந்து வருகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கியுள்ளன. போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளும், தலா 14 போட்டிகளில் விளையாட உள்ளன. அதில், ஒவ்வொரு அணியுடனும் சொந்த மண்ணிலும், எதிர் அணியின் மண்ணிலும் விளையாட உள்ளன.
அதன்படி சென்னை சேப்பாக்கம் எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் 7 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்துவது தங்களுடைய போராட்டங்களின் கவனத்தை திருப்பிவிடும், அதனால் ஐபிஎல் போட்டி நடத்தக் கூடாது என்று கட்சிகள் வலியுறுத்தின. இதனால், போட்டியை நடத்தக் கூடாது என்று, மிகப் பெரிய போராட்டத்தில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஈடுபட்டன. பலத்த பாதுகாப்புக்கு இடையே சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் 10ம் தேதி நடந்தது. அதில் சிஎஸ்கே வென்றது.
போராட்டம் மிகப் பெரிய அளவில் இருந்ததால், வீரர்களின் பாதுகாப்பை கருதி, சென்னையில் நடக்கவிருந்த அடுத்த போட்டிகளை புனேவுக்கு மாற்றுவதாக ஐபிஎல் நிர்வாகம் கூறியது. புனேயில் போட்டி நடத்துவதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதால், சிஎஸ்கே போட்டிகள் எங்கு நடக்கும் என்பதில் குழப்பம் உள்ளது.
இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அடுத்து நடக்கவிருந்த 6 போட்டிகளுக்கு ஏற்கனவே டிக்கெட் வாங்கியவர்கள், அதற்காக பணத்தை திரும்பப் பெறலாம் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி, பணத்தை திரும்பப் பெறுவதற்காக, சேப்பாக்கத்தில் ரசிகர்கள் குவிந்துள்ளனர். வரும் 20ம் தேதி வரை, சேப்பாக்கம் மைதானத்தில், டிக்கெட்டை ஒப்படைத்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்து. ஆன்லைன் மூலமாக வாங்கியவர்களுக்கு, அவர்களுடைய வங்கிக் கணக்குகளுக்கு பணம் திருப்பி செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற. Subscribe to Tamil MyKhel.
கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!