இரண்டு இந்திய அணிகள்… ஏழு ஒற்றுமைகள்…. ஒரே வித்தியாசம்!

By: SRIVIDHYA GOVINDARAJAN
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்த ஒற்றுமையை யாரவது கவனிச்சீங்களா?- வீடியோ

டெல்லி: தென்னாப்பிரிக்காவில் நேற்று முன்தினம் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள், தென்னாப்பிரிக்காவை வென்றன. இரு இந்திய அணிகளும் பல புதிய சாதனைகளைப் புரிந்தன.

ஆடவர் அணி 6 போட்டித் தொடரில் மூன்று போட்டிகளில் வென்று 3-0 என முன்னிலை பெற்றது. மகளிர் அணி 3 போட்டித் தொடரில் இரண்டாவது போட்டியிலும் வென்று 2-0 எனத் தொடரை வென்றது. இந்த இரு அணிகளுக்கும் இடையே ஏழு ஒற்றுமைகள் உள்ளன. அதே நேரத்தில் ஒரே ஒரு வித்தியாசம்தான் உள்ளது.

Difference between teams

ஒற்றுமை 1 : இரு அணிகளும் விளையாடியப் போட்டியில் தென்னாப்பிரிக்காவே டாஸ் வென்று, இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது.

ஒற்றுமை 2 : இரு அணிகளுமே 300க்கு மேற்பட்ட ரன்களை குவித்தது. ஆடவர் அணி 6 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் குவித்தது. மகளிர் அணி, 3 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் குவித்தது.

ஒற்றுமை 3: இரு அணிகளிலும், 18ம் எண் அணிந்தவர்கள் சதம் அடித்தனர். ஆடவர் பிரிவில் விரோட் கோஹ்லி 160 ரன்களும், மகளிர் அணியில் ஸ்மிருதி மந்தானா 135 ரன்களும் குவித்தனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியர் எடுத்து அதிகபட்ச ரன்கள் என்ற சாதனையை இருவரும் புரிந்தனர்.

ஒற்றுமை 4: இரு அணிகளும் பல பேட்டிங் சாதனைகளைப் புரிந்தன. 34வது சதம், கேப்டனாக 12வது சதம் அடித்து இந்திய கேப்டன்களில் முதலிடம் என, பல பேட்டிங் சாதனைகளை கோஹ்லி முறியடித்தார்.

மகளிர் பிரிவில் மிகக் குறைந்த வயதில் மூன்று சதமடித்தவர் என்ற சாதனையை ஸ்மிருதி புரிந்தார். அதேபோல் வலுவான ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக சதமடித்தவர் என்ற சாதனையையும் புரிந்தார்.

இதே போட்டியில் ஆட்டமிழக்காமல் 55 ரன்கள் எடுத்த ஹர்மன்பிரீத் கவுர், ஒருதினப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த மூன்றாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். தற்போதைய கேப்டன் மிதாலி ராஜ், முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா முதலிரண்டு இடங்களில் உள்ளனர்.

ஒற்றுமை 5: சுழற்பந்து வீச்சாளர்கள் 8 விக்கெட்களை வீழத்திய சாதனையை இரண்டு அணிகளுமே புரிந்துள்ளது. ஆடவர் பிரிவில் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் தலா 4 விக்கெட்டை வீழ்த்தினர். மகளிர் பிரிவில் பூணம் யாதவ் 4 விக்கெட்கள், தீப்தி சர்மா மாற்றும் ராஜேஷ்வர் கெயிக்வாட் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.

ஒற்றுமை 6: இரு அணிகளுக்கு 100 ரன்களுக்கு மேற்பட்ட வித்தியாசத்தில் வென்றது. ஆடவர் அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதே நேரத்தில் மகளிர் அணி 178 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. மகளிர் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிகபட்ச ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றி இது.

ஒற்றுமை 7: அணியின் மிகவும் மூத்தவர் சாதனைப் புரிந்தது. ஆடவர் பிரிவில் 36 வயதாகும் கேப்டன் கூல் டோணி, விக்கெட் கீப்பராக, 400 விக்கெட்களை வீழ்த்திய முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையைப் புரிந்தார். உலக அளவில் இந்த சாதனையைப் புரியும் நான்காவது கீப்பர் டோணி.

மகளிர் பிரிவில் அணியின் மூத்தவரான, 35 வயதாகும் ஜூலான் கோஸ்வாமி, ஒருதினப் போட்டிகளில் 200 விக்கெட்களை வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற சாதனையைப் புரிந்தார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்த ஏழு ஒற்றுமைகளையும் பார்த்து நீங்கள் ஆச்சரியமடைந்திருப்பார்கள். அதே நேரத்தில் இந்தப் போட்டியில் உள்ள ஒரே வேற்றுமை….

இந்த செய்தியில் மட்டுமல்ல, நேற்று வெளியான அனைத்து ஊடக செய்திகளிலும், ஆடவர் அணி குறித்தே பெரிதாக வெளியானது. அதற்கு அடுத்தே மகளிர் அணியின் சாதனை சின்னதாக வெளியானது.

19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை போட்டியைக் கூட மீடியாக்களும், மக்களும் மிகவும் விருப்பமுடன் பார்த்தனர். அது குறித்த செய்திகள் பெரிதாக வந்தது. ஐபிஎல் போட்டிகளுக்கு இருக்கும் வரவேற்பு கூட, இந்திய மகளிர் அணி விளையாடும் போட்டிக்கு இருப்பதில்லை.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மகளிர் கிரிக்கெட் அணி விளையாட போட்டியை எந்த டிவியும் நேரடியாக ஒளிபரப்பவில்லை.

பிசிசிஐ கூட, டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்ததோடு நிறுத்திக் கொண்டது. ஆண்கள் அணிக்கும், மகளிர் அணிக்கும் இடையே உள்ள மிகப் பெரிய வித்தியாசம் இதுதான்.

இது மாறுமா?

Story first published: Friday, February 9, 2018, 15:05 [IST]
Other articles published on Feb 9, 2018
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற