For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியின் பாராட்டை பெற்றார்.... இதைவிட பெரிய தகுதி என்ன வேண்டும்... ராயுடுவின் ராயல் கம்பேக்!

இனிமேல் அவ்வளவுதான் என்று நினைத்த விஷயங்களும் இயக்கங்களும் மக்களும் மேலே வருவதுதான் எவ்வளவு இனிமையான விஷயம். ராயுடுவின் கிரிக்கெட் வாழ்க்கையும் அப்படித்தான்.

புனே: செப் 8 2014ம் ஆண்டு, சுடச்சுட டெஸ்ட் தொடரை 1-3 என்று இழந்த நிலையில், இருபது ஓவர்கள் கொண்ட ஒரே ஒரு ஆட்டத்தில் இந்தியா இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. 181 ரன்கள் என்கிற இலக்கை நோக்கிப் பயணிக்கையில், இறுதி ஓவரில் 17 ரன்கள் தேவைப்படுகிறது.

கேப்டன் தோனியுடன் களத்தில் இருந்தது ராயுடு. இறுதி ஓவருக்கு முந்தைய ஓவரில் ராயுடு பவுண்டரிகள் அடிக்க முற்பட்டு முடியாமல் தவிப்பதைப் பார்த்த தோனி, தான் மட்டுமே நின்று அடித்து விட வேண்டுமென்கிற மாதிரி முதல் பந்திலேயே ஒரு சிக்ஸர் விளாசுகிறார். அதன் பின்பு பவுண்டரிகள் அடிக்க நினைத்து இரண்டு முறை ஒரு ரன் எடுக்க வாய்ப்பு இருந்தும், ராயுடுவுக்கு ஸ்டிரைக் கொடுக்க வேண்டாமென முடிவெடுக்கிறார்.

இறுதியில் ஒரு பந்தில் ஐந்து ரன்கள் என்ற நிலை வரும்போது சிக்ஸர் அடிக்கத் தவறி தோனி இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியாமல் ஏமாற்றுகிறார். பின்பு செய்தியாளர்களுடன் உரையாடுகையில், ராயுடு அந்த மாதிரி இக்கட்டான நிலைகளில் போதிய அனுபவம் இல்லாததாலேயே அவருக்கு ஸ்டிரைக் கொடுக்கவில்லை என்று தோனி கூறினார். ராயுடுவின் மனநிலை அன்று எவ்வாறு அன்று இருந்திருக்கும்.

பதினைந்து வருடங்களுக்கு முன்பு, தற்போது இருப்பதைப்போல உள்ளூர் போட்டிகளின் மீது அவ்வளவு வெளிச்சம் விழாது. யாராவது அசகாய வித்தைகள் செய்தால் மட்டுமே அவர்களைப் பற்றி ஒரு சிறு பத்தியில் செய்தி வரும். அப்போதே தினசரிகளில் அம்பாதி ராயுடுவைப் பற்றி நிறைய செய்திகள் வரும். அதில் முதன்மையானது, இந்தியாவிற்கு அடுத்த சச்சின் கிடைத்துவிட்டார் என்பது தான். ஹைதராபாத்தில் பொளந்து கட்டிக்கொண்டிருந்த ராயுடு, கபில் தேவ் ஆரம்பித்த ஐசிஎல் தொடரில் பங்கேற்க சம்மதம் தெரிவித்தப்போது அவரது வயது 19. பதினாறு வயதுக்குட்பட்டோர் தொடர்களில் தொடர்ச்சியாக நன்றாக செயல்பட்டும் இந்திய அணி நம்மை கண்டுக் கொள்ளவில்லையே என்கிற ஆதங்கத்தில் எடுத்த முடிவு அவரது வாழ்க்கையை திருப்பி போட்டது.

 மீண்டும் வந்தார்

மீண்டும் வந்தார்

பின்பு அடுத்த வருடமே ஐபிஎல் ஆரம்பிக்க செயல் திட்டங்கள் தீட்டும் வேளையில் ஐசிஎல் போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு இரண்டாண்டுகள் தடை என்று அறிவித்தது. 2010ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் ராயுடுவை தேர்ந்தெடுத்தாலும், அவரது திறமையை முழுதாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. தோனி, கோஹ்லியின் தலைமையில் தேசிய அணிக்கு அவ்வப்போது விளையாடினாலும் ஒரு அசாதாரண சூழலில் தன்னுடைய திறமையை நிரூபிக்கும் சந்தர்ப்பங்கள் ராயுடுவுக்கு அமையவே இல்லை. தினேஷ் கார்த்திக்கை போலவே கடைசி வரை, "அருமையான பிளேயர், ஆனால் பெரிதாக சாதிக்கவில்லை..." என்கிற பேச்சோடு வாழ்க்கை முடிந்துவிடுமோ என்கிற நிலையில், ஐபிஎல்லில் ராயுடுவின் பெயர் ஏலத்தில் வந்தது.

 ஆச்சரியப்படுத்திய மாற்றம்

ஆச்சரியப்படுத்திய மாற்றம்

இரண்டு கோடியே இருபது லட்சத்திற்கு ராயுடுவை சென்னை எடுத்தப்போது, புருவங்கள் உயர்ந்தன. மும்பைக்கு பல்வேறு இக்கட்டான சூழலில் ராயுடு சில ரன்களை குவித்திருந்தாலும், அவரது ஆட்டிட்யூட் சென்னைக்கு செட் ஆகுமா என்பதே முதல் கேள்வி. ஹர்பஜனுடன் சண்டை, மைதானத்திலேயே கத்துவது, எப்போதும் ஏதோ ஒரு சண்டைக்கு தயாராக இருப்பது என ராயுடுவின் பேட்டிங் எவ்வளவு ப்ளஸ்கள் நிறைந்ததோ, அதை விட நிறைய மைனஸ் அவரிடம் இருந்தது. ஐபிஎல் தொடங்குவதற்கு இருபது நாட்கள் முன்பாகவே சேப்பாக்கம் மைதானத்தில் வீரர்கள் குழுமி பயிற்சியில் ஈடுபட, ராயுடுவுடன் தோனி சேர்ந்து வகுக்கும் வியூகங்கள் புகைப்படங்களாக வெளிவரும்போதே ஏதோ ஸ்பெஷலாக இருக்கப்போகிறது என்று தோன்றியது.

 மீண்டும் இந்திய அணியில்

மீண்டும் இந்திய அணியில்

இந்த வருடத்தின் முதல் போட்டியிலேயே ராயுடு தன்னை வளர்த்த அணியுடன் மோத, வாட்சனுடன் ராயுடு துவக்க வீரராக களமிறங்கினார். வருகிற செப்டம்பர் மாதத்தில் 33 வயதில் அடியெடுத்து வைக்கும் ராயுடுவிற்கு பதினைந்து ஆண்டுகளுக்கு அப்புறம் நல்ல நேரம் துவங்கியிருக்கிறது. மனீஷ் பாண்டே, ஷ்ரேயாஸ், கேதார் ஜாதவ் போன்றவர்களிடம் தன்னுடைய இடத்தை இழந்து போராடிய ராயுடு மீண்டும் சர்வதேச அணியில் இடம் பிடித்துள்ளார்.

 கேப்டனின் பாராட்டு

கேப்டனின் பாராட்டு

"ராயுடுவின் பேட்டிங் மீது நான் எப்போதும் பெரு மதிப்பு வைத்திருந்தேன். ஐபிஎல் தொடங்கும் முன்பே அவரை துவக்க வீரராக அனுப்ப வேண்டுமென்று முடிவு செய்து விட்டேன்..." என தோனி கடந்த போட்டியின் இறுதியில் குறிப்பிட்டார். 2014ல் அப்போதைய மைதானத்தின் அல்லது போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப தோனி அந்த முடிவை எடுத்திருக்கலாம். ஆனால், யாரிடமிருந்து ஸ்டிரைக் கிடைக்காமல் நொந்து போய் பெவிலியன் திரும்பினாரோ அவரது வாயாலேயே சிறந்த வீரர் என்கிற அங்கீகாரம் கிடைக்கும் வரை போராடிய ராயுடுவின் வரலாறு எல்லோருக்கும் ஒரு பாடம்.

Story first published: Tuesday, May 15, 2018, 17:59 [IST]
Other articles published on May 15, 2018
English summary
Rayudu has made complete use of the given opportunity after wearing the yellow jersey this season.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X