For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் தமிழகத்தில் விளையாட ஜெ. எதிர்ப்பு- பிரதமருக்கு கடிதம்!

By Mathi
Jayalalitha
சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வீரர்கள் தமிழகத்தில் விளையாட அனுமதிக்கக் கூடாது என்று பிரதமருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ள்ளார். இதேபோல் இலங்கையின் நடுவர்கள், களப் பணியாளர்கள் உட்பட எவரையும் அனுமதிக்கவும் முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 3-ந் தேதி தொடங்கி 45 நாட்கள் நடைபெறுகிறது. இதில் சென்னையில் 10 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இலங்கையைச் சேர்ந்த 8 வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.

தற்போது தமிழகத்தில் இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு எதிராகவும் தமிழீழத் தனியரசு அமைக்க பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரியும் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. இப்போராட்டங்களின் போது இலங்கையைச் சேர்ந்த எந்த விளையாட்டு வீரர்களையும் தமிழகத்துக்குள் அனுமதிக்கக் கூடாது என்ற குரலும் எழுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில், இலங்கைப் பிரச்சினை தொடர்பாக சமீபத்தில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் விவாதம் நடைபெற்றபோது, தமிழ்நாட்டு மக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர். இத்தகைய சூழ்நிலையில் சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு இடங்களில் ஏப்ரல் 3-ம் தேதி முதல், மே 26-ம் தேதி வரை ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன.

தமிழகத்தில் எழுச்சி போராட்டம்

இதில் பங்கேற்கும் அனைத்து அணிகளிலும் இலங்கையின் வீரர்கள் மற்றும் அணி உறுப்பினர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். இலங்கையில் நடந்த உள்நாட்டு சண்டையின்போது இலங்கை அரசு ராணுவத்தைப் பயன்படுத்தி, பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருந்த தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தது. இந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச ஊடகங்களில் விரிவாக ஆவணப்படுத்தப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த இனப்படுகொலை தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் உண்ணாவிரதம், தீக்குளிப்பு போன்ற போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதேபோல் ஆழ்கடலில் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டும் என்று தங்களுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறேன். இந்த தாக்குதலைக் கண்டித்து தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன. இத்தகைய விரோத போக்கு மற்றும் பதட்டமான சூழ்நிலையில், இலங்கை வீரர்கள் சென்னையில் பல போட்டிகளில் விளையாடுவதால் தமிழர்களின் உணர்வுகளை மேலும் புண்படுத்துவதாக அமையும்.

இலங்கை வீரர்களை அனுமதிக்கக் கூடாது

எனவே, தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இலங்கை வீரர்களை தமிழகத்தில் விளையாட அனுமதிக்கக்கூடாது. இலங்கையைச் சேர்ந்த வீரர்கள், நடுவர்கள் மற்றும் அதிகாரிகள் ஒருவரும் தமிழ்நாட்டில் நடைபெறும் விளையாட்டில் பங்கேற்கக் கூடாது. எனவே, இலங்கை வீரர்களை சென்னை போட்டிகளில் சேர்க்கக் கூடாது என்று பி.சி.சி.ஐ.க்கு அரசு அறிவுறுத்த வேண்டும். இலங்கையைச் சேர்ந்த வீரர்கள், நடுவர்கள், அதிகாரிகள் மற்றும் களப்பணியாளர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்று போட்டி அமைப்பாளர்கள் உறுதி அளித்தால் மட்டுமே, ஐ.பி.எல். போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்கும் என்று கூறியுள்ளார்.

Story first published: Tuesday, March 26, 2013, 17:51 [IST]
Other articles published on Mar 26, 2013
English summary
Tamil Nadu Chief Minister J Jayalalithaa has written to the Prime Minister stating categorically that the eight Sri Lankan cricketers in the Indian Premier League will not be allowed to play matches held in Chennai.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X