
டூ ப்ளஸிஸ் கருத்து
இந்த நிலையில் பெங்களூரு அணியில் விராட் கோலியுடனான நட்பு குறித்து டூ ப்ளஸிஸ் மனம் திறந்துள்ளார். விராட் கோலி குறித்து டூ ப்ளஸிஸ் கூறுகையில், ஆர்சிபி ஜெர்சியில் தனது இதயத்தை வைத்திருப்பவர் விராட் கோலி. விராட் கோலி அளவிற்கு இந்திய அணி வீரர்களின் மனநிலையில் மாற்றத்தை கொண்டு வந்த கேப்டன்கள் யாருமே இல்லை. அவருடனான போட்டி எப்படி இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும்.

விராட் கோலியுடன் நட்பு
விராட் கோலி என்னைவிடவும் சிறந்த வீரர். சில நேரங்களில் ஒரே அணியில் நட்சத்திர வீரர்கள் அதிகமிருந்தால், ஈகோ பிரச்சினை இருக்கும். ஆனால் நான் உறவுகள் புரிந்துகொள்பவன். ஓய்வறையிலும் சரி, அணியிலும் சரி, எப்போதும் நான் யாருடனும் போட்டியிட மாட்டேன். அதுதான் விராட் கோலியுடன் நட்பு ஏற்பட காரணமாக இருந்தது.

கொண்டாட்டம்
விராட் கோலிக்கு எதிராக பல காலங்களாக ஆடி வந்துள்ளேன். ஒவ்வொரு முறை விராட் கோலி மைதானத்தில் இருக்கும் போது, அவரின் எனர்ஜி குறித்து வியந்துள்ளேன். எதிரணியின் கடைசி விக்கெட் வீழ்த்தப்பட்டாலும், அவரின் கொண்டாட்டத்தில் ஒரு துளி கூட குறையாது. அதற்காகவே அவருக்கு மரியாதை அளிக்க வேண்டும்.

களத்தில் வேறு முகம்
அவர் சாதாரண மனிதர் இல்லை. அதேபோல் விராட் கோலி அணியில் உள்ள அனைவரையும் குடும்ப உறுப்பினரை போலவே நடத்துவார். நட்புடன் பழகினால் அனைவரையும் ஆச்சரியப்படுத்த கூடியவர் விராட் கோலி. ஆனால் களத்தில் வேறு முகத்தை வெளிப்படுத்துகிறார் என்று தெரிவித்தார்.