ஸ்பெயின் அணிக்கே உலகக் கோப்பை-கணித்தது ஆக்டோபஸ் பால்

Posted By:
Octopus Paul
ஜெர்மனி அரை இறுதிப் போட்டியி்ல் தோற்கும் என கணித்து பரபரப்பை ஏற்படுத்திய பெர்லின் நகர ஆக்டோபஸ் பால், கால்பந்து உலகக் கோப்பையை ஸ்பெயின்அணியே வெல்லும் என்று கூறி மறுபடியும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரை இறுதிப் போட்டிக்கு முன்பாக ஆக்டோபஸ் ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி அணியின் கொடிகள் அடங்கிய தொட்டி மீது ஆக்டோபஸை விட்டனர். அப்போது அது ஸ்பெயின் அணியின் கொடி அடங்கிய தொட்டி மீது முழுமையாக பரவி நின்றது. இதையடுத்து ஸ்பெயினே வெல்லும் என கணிக்கப்பட்டது.

அந்தக் கணிப்பை ஜெர்மன் ரசிகர்கள் ரசிக்கவில்லை. மாறாக, இதை வறுத்துப் பொறித்துத் தின்ன வேண்டும் என்று கோபத்தைக் கொட்டினர். ஆனால் பால் கணிப்புப்படியே ஸ்பெயின் வென்றது, ஜெர்மனிதோற்றது.

இந்த நிலையில் மீண்டும் ஆக்டோபஸ் பால் ஒரு கணிப்பை தெரிவித்துள்ளது. அது உலகக் கோப்பையை ஸ்பெயினே வெல்லும் என்பது. இதுதொடர்பான நிகழ்ச்சியை ஐரோப்பா முழுவதும் டிவிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்தனர்.

2 வயதான இந்த ஆக்டோபஸ் பால், ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து நாட்டுக் கொடிகள் அடங்கிய உணவுத் தொட்டிக்கு அருகே விடப்பட்டது. அப்போது சரியாக ஸ்பெயின் கொடி அடங்கிய தொட்டியை அது அழகாக பற்றிக் கொண்டது. 3 நிமிடத்தில் அது ஸ்பெயின் கொடி அடங்கிய தொட்டியைப் பிடித்தது.

இதுகுறித்து அந்த ஆக்டோபஸ் வைக்கப்பட்டிருக்கும் சீ லைப் அருங்காட்சியகத்தின் செய்தித் தொடர்பாளர் தஞ்சா முன்ஜிக் கூறுகையில், பால் தெளிவாக கணித்துள்ளது. ஸ்பெயினே இந்தப் போட்டியில் வெற்றி பெறும் என்றார்.

மேலும் அதி விரைவாக அது ஸ்பெயின் கொடி அடங்கிய தொட்டி மீது அமர்ந்தது வியப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

சில நேரங்களில் பால், 70 நிமிடம் வரை கூட எடுத்துக் கொள்ளுமாம். ஆனால் ஸ்பெயினை தேர்ந்தெடுக்க 3 நிமிடமே ஆனது வியப்பாக உள்ளது. நிச்சயம் ஸ்பெயின்தான் வெல்லும் என்று அவர் தெரிவித்தார்.

ஆக்டோபஸ் பால், ஸ்பெயினே வெல்லும் என கணித்ததால் ஸ்பெயின் முழுவதும் பெரும் உற்சாகம் கரைபுரண்டோடுகிறது. எங்களை ஆக்டோபஸ் பால் சாம்பியனாக்கி விட்டது என்று அங்குள்ள மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆக்டோபஸ் பால் முதலில் எந்தத் தொட்டியை தொடுகிறதோ அதில் உள்ள கொடிக்குரிய அணிதான் வெல்லும் என்பது கணிப்பு. நடப்பு உலகக் கோப்பைப் போட்டியில் நான்கு முறை இதுபோல அது கணித்து அதன்படியே நடந்தது.

ஒரு விலங்கின் கணிப்பை நேரடியாக டிவிகளில் ஒளிபரப்பு செய்தது இதுவே உலகில் முதல் முறை என்று கூறப்படுகிறது.

3வது இடம் ஜெர்மனிக்கு

முன்னதாக 3வது இடத்தைப் பிடிப்பது யார் என்ற கணிப்பிலும் பால் ஈடுபடுத்தப்பட்டது. அப்போது அது ஜெர்மனியையே தேர்ந்தெடுத்து, பால் மீது கோபத்தில் இருக்கும் ஜெர்மனி ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது.

வழக்கமாக ஜெர்மனி ஆடும் போட்டிகளுக்கு மட்டும்தான் ஆக்டோபஸ் பாலின் கணிப்பு அறியப்படும். ஆனால் முதல் முறையாக இந்த இறுதிப் போட்டியில் வெல்வது யார் என்பதை அறிய கணிப்பு நடத்தப்பட்டிருப்பதாக சீ லைப் அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.

எல்லாம் சரி, பால் சொல்லி விட்டதே என்று ஸ்பெயின் வீரர்கள் 'ஜாலியாக' ஆடினால் அவர்களது கோப்பைக் கனவுக்கு பால் ஊற்ற வேண்டியதுதான்!

Story first published: Friday, July 9, 2010, 16:54 [IST]
Other articles published on Jul 9, 2010
Please Wait while comments are loading...
POLLS